/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 85 ஆயிரம் புது வாக்காளர்கள் சேர்ப்பு!
/
கோவையில் 85 ஆயிரம் புது வாக்காளர்கள் சேர்ப்பு!
ADDED : ஜன 25, 2024 06:29 AM
கோவை : வரும் லோக்சபா தேர்தலில் பயன்படுத்த வெளியிட்டுள்ள, கோவை மாவட்டத்துக்கான இறுதி பட்டியலில், 85 ஆயிரம் புது வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல், 53 ஆயிரத்து, 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, கோவை மாவட்டத்தில் நடந்தது. பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்து, பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், இரட்டை பதிவு என பல்வேறு திருத்தங்களுக்கு இம்முறை கவனம் செலுத்தி, பெயர்கள் நீக்கப்பட்டன.
இவ்வகையில், இறந்தவர்கள் வரிசையில், 15 ஆயிரத்து, 321 பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. முகவரி மாறிச் சென்றவர்களாக, 29 ஆயிரத்து, 962 பெயர்கள், இரட்டை பதிவுகளில், 7,807 பெயர்கள் நீக்கப்பட்டன. மொத்தம், 53 ஆயிரத்து, 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். வரைவு பட்டியலில், 32 ஆயிரத்து, 590 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
பட்டியல் வெளியீடு
தற்போது தயாரித்துள்ள இறுதி வாக்காளர் பட்டியலே, வரும் லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப் பட உள்ளது. இப்பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
மொத்தம், 30 லட்சத்து, 81 ஆயிரத்து, 594 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15 லட்சத்து, 9 ஆயிரத்து, 906 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து, 71 ஆயிரத்து, 93 பெண் வாக்காளர்கள், 595 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். வழக்கம் போல், ஆண்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கின்றனர்.
கடந்தாண்டு அக்., 27ல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 30 லட்சத்து, 49 ஆயிரத்து, 4 வாக்காளர்கள் இருந்தனர். நவ., மாதம் நான்கு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 18-19 வயது பூர்த்தியான இளைஞர்களை சேர்க்க முனைப்பு காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இறுதி பட்டியலில், வாக்காளர்கள் எண்ணிக்கை, 30 லட்சத்து, 81 ஆயிரத்து, 594 என அதிகரித்திருக்கிறது. 32 ஆயிரத்து, 590 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் பெருசு
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 4 லட்சத்து, 62 ஆயிரத்து, 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. இத்தொகுதி, தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொகுதியாகும். இரண்டு லட்சத்து, 29 ஆயிரத்து, 950 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து, 32 ஆயிரத்து, 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
மாவட்ட அளவில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 503 வாக்காளர்களுடன், வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு, 93 ஆயிரத்து, 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து, மூன்றாயிரத்து, 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
ஒரு தொகுதியில் மட்டும்
கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இத்தொகுதியில், ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றன. மற்ற ஒன்பது தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
85 ஆயிரம் புது வாக்காளர்கள்
கடந்தாண்டு, அக்.. 27ல் வரைவு பட்டியல் வெளியிட்ட பின், சிறப்பு முகாம்கள் மூலம் டிச., 9 வரை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 40 ஆயிரத்து, 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து, 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 85 ஆயிரத்து, 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல், 27 ஆயிரத்து, 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து, 731 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 53 ஆயிரத்து, 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.