/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகள் கட்ட நீதிபதிகளுக்கு கூடுதலாக ரூ.9 கோடி ஒதுக்கீடு
/
வீடுகள் கட்ட நீதிபதிகளுக்கு கூடுதலாக ரூ.9 கோடி ஒதுக்கீடு
வீடுகள் கட்ட நீதிபதிகளுக்கு கூடுதலாக ரூ.9 கோடி ஒதுக்கீடு
வீடுகள் கட்ட நீதிபதிகளுக்கு கூடுதலாக ரூ.9 கோடி ஒதுக்கீடு
ADDED : ஏப் 09, 2025 12:37 AM
கோவை; ரேஸ்கோர்ஸ் மற்றும் ரெட்பீல்டில் நீதிபதிகளுக்கு, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு, கூடுதலாக ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில், 55க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான நீதிபதிகள் நகரின் பல்வேறு இடங்களில், வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
ரேஸ்கோர்ஸ் மற்றும் ரெட்பீல்டில் தனி குடியிருப்புகள் குறைவாக இருப்பதால், அனைத்து நீதிபதிகளுக்கும் வீடு ஒதுக்க முடியாத நிலை இருந்தது.
இதனால் ரேஸ்கோர்சில் மாஜிஸ்திரேட் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிதாக, 16 வீடுகள் கொண்ட மூன்றடுக்கு மாடியும், ரெட்பீல்டில், 14 வீடுகள் கொண்ட அடுக்கு மாடியும் கட்டுவதற்கு, 2014ல் திட்டமிடப்பட்டது.
இதற்கு முதல் கட்டமாக, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2017ல் கட்டுமான பணி நடந்து வந்தது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால், தொடர்ந்து பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், கூடுதலாக 16.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், கட்டுமான பணி இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்கு கூடுதலாக கேட்ட தொகையில், ஒன்பது கோடி ரூபாய் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, முடங்கி கிடந்த கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.
இருப்பினும், முழுத்தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே, பணிகளை முடிக்க முடியும். தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் தொகை செலவழிந்து விட்டால், மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்படும் சூழ்நிலை ஏற்படும்.