UPDATED : அக் 06, 2026 10:58 PM
ADDED : அக் 06, 2026 08:00 PM
கோவை: நகர் பகுதியில் உள்ள மின் மயானங்களில் சடலம் எரியூட்ட ரூ.2,000 வசூலிக்க வேண்டும். ஆத்துப்பாலம் மயானத்தில் கூடுதல் கட்டணம் கேட்பதாகவும், காத்திருப்போர் அறை கூடுதலாக கட்ட வேண்டும், 2 தகன மேடையில் ஒன்று செயல்படுவதில்லை என்கிற புகாரும் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சென்றது.
மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச்செல்வன் சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர். பின்னரும் கூடுதல் கட்டண புகார் எழுந்தது.
பொதுமக்கள் கூறுகையில், 'கட்டணம் ரூ.2,000 என எழுதப்பட்டுள்ளது. ஊழியர்கள் இருவரும் சம்பளம் தருவதில்லை என கூறி ரூ.1,500 வாங்குகின்றனர். ஆம்புலன்ஸில் சடலம் எடுத்து வர ரூ.3,500, சடங்குகள் செய்ய தனி என, ரூ.7,500 வரை வாங்குகின்றனர். கூடுதலாக வசூலித்தால் யாரிடம் முறையிடலாம் என்கிற எண்ணுடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்' என்றனர்.
