ADDED : ஏப் 17, 2026 08:25 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பங்களை கண்காணிக்க முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் இந்த கேமராக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், வீடியோ பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்தாலும், மீண்டும் அதே பிரச்னை ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு பைக் ரேசிங், செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நடந்ததால், கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில காலம் எந்த பிரச்னையும் வரவில்லை.
தற்போது மீண்டும் செயின் பறிப்பு, பைக் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இதை தவிர்க்க மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள், மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
