ADDED : மார் 19, 2026 04:26 AM
கோவை: தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் நேற்று கோவையில் ஆய்வுகளை மேற்கொண்டு, தேர்தல் முன்னேற்பாடு செயல்பாடுகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோவைக்கு நேற்று காலை வந்த ஏ.டி.ஜிபி., ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஐ.ஜி அலுவலகத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து, மாநகர கமிஷனர் அலுவலகத்திலும், எஸ்.பி., அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில், தேர்தல் முன்னிட்டு கண்காணிப்பு பணியில் எத்தனை போலீசார் உள்ளனர், வெளி மாநிலங்களில் இருந்து எத்தனை பேர் தேவை என்பதை கேட்டறிந்தார். மேலும், பதற்றமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், தேர்தல் சமயத்தில் கட்சியினர் அனைத்து நிலை நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், கோவையின் முக்கிய பிரச்னைகள், போக்குவரத்து பிரச்னை, நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
