'தன் தோல்வி, குறைபாடுகளை ஒப்புக்கொள்வது தான் பலம்'
'தன் தோல்வி, குறைபாடுகளை ஒப்புக்கொள்வது தான் பலம்'
ADDED : மார் 16, 2026 06:19 AM

சூலுார்: ''மனிதன் தன் குறை பாடுகளையோ, தோல்விகளையோ ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல, அதுதான் உண்மையான பலம்,'' என, வாழ்வியல் பயிற்சியாளர் சசிகுமார் பேசினார்.
ஞான சஞ்சீவன குருகுலம் சார்பில், ஞானோதயம் அமைப்பின் பண்பு படையின் இரண்டாம் மாத பயிற்சி முகாம், முத்துக்கவுண்டன் புதுாரில் நடந்தது. சம்பத்குமார் தலைமை வகித்தார்.
குருகுல நிறுவனர் சசிகுமார் பேசியதாவது:
நாம் புறச்சூழ்நிலைகளில் தேடுவதை விட, நமக்குள்ளே தேடினால் இறைவனை காணமுடியும். ஒரு மனிதன் தன் தோல்விகளையோ, குறைபாடுகளையோ ஒப்புக் கொள்வது பலவீனம் அல்ல. அதுதான் உண்மையான பலம். சரணடைவது என்பது சூழ்நிலையிடம் மண்டியிடுவது அல்ல. மாறாக, நம்மால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொண்டு, நம்மால் மாற்ற முடிந்தவற்றில் கவனம் செலுத்தி, ஒரு தெளிவான மனநிலையுடன் வெற்றி பெறுவதாகும்.
நாம் ஒரு செயலை செய்யும் போது, முதலில் பயம் இருக்கும். ஆனால், அந்த செயலை மீண்டும், மீண்டும் செய்யும் போது பழகிவிடும். பயம் என்பது வெற்றியை தடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு தடை. சிந்தனையை சீர்படுத்தி எண்ண த்தை நோக்கமாக வைத்து செயல்பட்டால், வெற்றி பெறுவதற்கு உண்டான மன தைரியம் உண்டாகும். வாழ்வியல் பயிற்சி எடுத்துக் கொண்ட பண்புபடை வீரர்கள், 18 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த, 72 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
