/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., கவுன்சிலர் மீது அ.தி.மு.க.,புகார்
/
தி.மு.க., கவுன்சிலர் மீது அ.தி.மு.க.,புகார்
ADDED : ஜன 04, 2024 10:35 PM

மேட்டுப்பாளையம்:மக்களுடன் முதல்வர் முகாமில், தி.மு.க., கவுன்சிலர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேட்டுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அ.தி.மு.க., நகர்மன்ற உறுப்பினர்கள், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி, மேட்டுப்பாளையம் நகராட்சியில் கூட்டம் துவங்கிய போது, நகராட்சி கமிஷனரும், பொறியாளரும் கலந்து கொள்ளவில்லை.
நகரில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. மேலும் மக்கள் பிரச்னையை பற்றி பேச வேண்டும். ஆகவே அதிகாரிகள் வந்ததும் கூட்டத்தை நடத்துங்கள் என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினோம்.
அதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக கூட்டத்தை நடத்துங்கள் என கூறினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். உடனே, 17 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார், 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீராம் ஆகியோர் அ.தி.மு.க., கவுன்சிலர் மீது, நாற்காலியை தூக்கி வீசி, ஆபாசமான தகாத வார்த்தைகள் பேசி, கொலை வெறி தாக்குதலை நடத்தினர்.
இது சம்பந்தமாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சார்பில், 31ம் தேதி மேட்டுப்பாளையம் போலீசில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புகார் மனு கொடுத்தோம். இரண்டு மாதங்கள் ஆகியும், வழக்கும் பதிவு செய்யவில்லை, சி.எஸ்.ஆர்., கூட போடவில்லை.
எனவே இந்த முகாமில் கொடுத்த கோரிக்கை மனு மீது, நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என, மனுவில் கூறியுள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில்,' நகர் மன்ற அரங்கில், நாங்கள் போராட்டம் செய்ததால், அலுவலக பணிகள் பாதித்தது என, எங்கள் மீது நகராட்சி கமிஷனர் கொடுத்த புகாரின் மீது, மேட்டுப்பாளையம் போலீசார், எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் எங்கள் மீது நாற்காலியை தூக்கி வீசிய, தி.மு.க., கவுன்சிலர் மீது, நாங்கள் கொடுத்த புகாருக்கு, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு ஏதும் போடவில்லை,' என்றனர்.