/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரங்களை இறுக்கும் விளம்பரக் கம்பிகள்; தடுக்க பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை
/
மரங்களை இறுக்கும் விளம்பரக் கம்பிகள்; தடுக்க பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை
மரங்களை இறுக்கும் விளம்பரக் கம்பிகள்; தடுக்க பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை
மரங்களை இறுக்கும் விளம்பரக் கம்பிகள்; தடுக்க பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : ஆக 16, 2025 09:16 PM
கோவை; விளம்பர அட்டை கட்டப்படும் கம்பிகளால், மரங்களின் தண்டுப்பகுதி இறுகி, துண்டாகி, வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
நகரப்பகுதிகளில், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், மரங்களில் ஏராளமான விளம்பர அட்டைகள் தொங்கவிடப்படுகின்றன. மரங்களில் பச்சை நிறமே தெரியாத அளவுக்கு விளம்பர அட்டைமயமாக உள்ளது.
இந்த அட்டைகள் மரத்தின் தண்டு, கிளைப் பகுதியில் இறுக்கமாக கம்பிகொண்டு கட்டப்பட்டுள்ளன. இதனால், மரங்கள் வளரும்போது, கம்பிகள் கிளைகளை இறுக்கி, அந்தப் பகுதியை விரிவடைய விடாமல் செய்கின்றன.
இதனால், கிளைகள் முறிந்து, மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில் குறு மரங்களில் கட்டப்படும் கம்பிகள், அவற்றின் தண்டுப்பகுதியையே முற்றிலும் முடக்குகின்றன. முன்பு, விளம்பர அட்டைகளை மரங்களில் ஆணி அடித்துப் பொருத்தினர். இதற்கு எதிர்ப்பு எழுந்து, கோர்ட் அபராதம் விதித்ததும், கம்பிகளுக்கு மாறியுள்ளனர்.
இதுவும் மரங்களைப் பாதிக்கிறது என்பது விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு புரிவதே இல்லை. இதைத் தடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரீன் கேர் நிறுவனர் சையது கூறியதாவது:
முன்பு மரங்களில் ஆணி அடித்தனர். திருப்பூர் நீதிமன்றம், ஒவ்வொரு மரத்துக்காகவும் தலா ரூ.2,000 அபராதம் விதித்தது. மரங்கள் விளம்பரம் செய்வதற்கான தூண் அல்ல. அவற்றுக்கு உயிர் உள்ளது. கம்பி கட்டி விளம்பரம் செய்வது, பல ஆண்டுகளாக நடக்கிறது.
கல்வி நிறுவனங்களின் விளம்பரம், அதிகமாக இப்படி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கம்பியால் விளம்பர அட்டைகளைக் கட்டி, மரங்களை இம்சைப் படுத்துகின்றன.
மாவட்ட பசுமைக் குழு வாயிலாகவும், தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஏற்கனவே ஆணிகளையும், கம்பிகளையும் அகற்றியுள்ளோம்.
மாவட்ட நிர்வாகம், விளம்பர அட்டை தயாரிப்பவர்கள், விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்து தடுக்க வேண்டும். மரங்களில் சுற்றி அலங்கார விளக்குகளை, ஒளிர விடுவதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.