ADDED : பிப் 20, 2026 05:16 AM
பெ.நா.பாளையம்: 'மண்வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில், மண்ணுக்கு தழைச்சத்து கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறையினர் கூறியதாவது:
குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன், இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன் உள்ள இடைவெளியில், மண் வளத்தை இயற்கையாக பெருக்க, தக்கை பூண்டு பயிரிடலாம். இச்செடிகள், 45 நாட்கள் முதல், 80 நாட்களில் நன்கு வளர்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் போதும். தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும். இச்செடிகளின் வேர் முடிச்சுகளில், 80 சதவீதமும், இலைகளில் 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது. நன்கு வளர்ந்த செடிகளை மடக்கி உழுதுவிட வேண்டும். பின் இந்நிலத்தில் பயிரிடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரத்தின் தேவை இருக்காது.
ஆண்டுக்கு ஒருமுறை இதை பயிரிட்டு, நன்கு வளர்ந்த செடிகளை டிராக்டர் கொண்டு உழுது விடுவதால், செடிகள் மண்ணோடு மண்ணாகி நிலத்துக்கு தேவையான தழைச்சத்து பெருகி, பயிர்கள் ஊட்டம் பெறும். இவ்வாறு, கூறினர்.

