அர்ப்பணிப்பு உணர்வோடு பணி மகளிர் அணியினருக்கு 'அட்வைஸ்'
அர்ப்பணிப்பு உணர்வோடு பணி மகளிர் அணியினருக்கு 'அட்வைஸ்'
ADDED : பிப் 26, 2026 07:15 AM

மேட்டுப்பாளையம்: ''வரும் சட்டசபைத் தேர்தலில், மகளிர் அணியினர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிய வேண்டும். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற, ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், ஐயப்பன் கோவில் எதிரே, மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு வாக்காளரிடமும் தி.மு.க., அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மகளிர் அணியை பொறுத்தவரை, இத்தேர்தலில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிய வேண்டும். கடந்த முறை நடந்த தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இருந்தாலும், கோவைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் முதல்வர் கொடுத்து, திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி உள்ளார். நமக்குள் எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒன்றிணைந்து, கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும் வகையில் கடுமையாக தேர்தல் பணிகள் செய்ய வேண்டும். தேர்தலில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு, தேர்தல் முடிந்த பின் சிறப்பு பரிசு உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட செயலாளர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
