/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானாக்கள், மைய தடுப்புகளை அழகுபடுத்த ஆலோசனை! களம் இறங்கியது நகராட்சி நிர்வாகம்
/
ரவுண்டானாக்கள், மைய தடுப்புகளை அழகுபடுத்த ஆலோசனை! களம் இறங்கியது நகராட்சி நிர்வாகம்
ரவுண்டானாக்கள், மைய தடுப்புகளை அழகுபடுத்த ஆலோசனை! களம் இறங்கியது நகராட்சி நிர்வாகம்
ரவுண்டானாக்கள், மைய தடுப்புகளை அழகுபடுத்த ஆலோசனை! களம் இறங்கியது நகராட்சி நிர்வாகம்
ADDED : நவ 14, 2025 09:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், ரவுண்டானாக்கள், மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் குறித்து தன்னார்வ அமைப்புகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நிலம் கையகப்படுத்தப்பட்டு, 34.51 கோடி ரூபாய் நிதியில் ரோடு விரிவாக்கம் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.
மழைநீர் வடிகால் கட்டும் பணி மற்றும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த ரவுண்டானாவில், பொள்ளாச்சியின் அடையாள சின்னங்கள் அமைக்கப்படும் என, விரிவாக்கப்பணியின் போது கூறப்பட்டது.
ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளதால், ரவுண்டானா புதர்கள் மண்டி காணப்படுகிறது. அடையாள சின்னங்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் ரவுண்டானா அழகுப்படுத்துதல் குறித்து தொழில்வர்த்தக சபை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கமிஷனர் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1983ம் ஆண்டு முதல் சிறப்பு நிலையாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, 13.87 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது.
பேரூராட்சி, ஊராட்சிகள், பொள்ளாச்சி நகராட்சியையொட்டி வேகமாக வளர்ச்சி அடையும் பகுதியாக உள்ளது. பொள்ளாச்சி அருகே சுற்றுலா தலங்களான ஆழியாறு, வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம், உடுமலை, திருமூர்த்திமலை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், அம்பராம்பாளையம் தர்கா ஆகியவை அமைந்துள்ளது.
கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பொள்ளாச்சி உள்ளது. திண்டுக்கல், கோவை தேசிய நெடுஞ்சாலை, பல்லடம், திருப்பூர் நெடுஞ்சாலை என பிரதான ரோடுகள் உள்ளன.
இந்த ரோடுகள், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்வதால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில், சாலை பாதுகாப்பு அளிப்பது அவசியமாகும்.
கோவை மாவட்ட கலெக்டர், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளில் மைய தடுப்புகள் ஏற்படுத்தியும், சந்திப்பு பகுதிகளில் புதிததாக ரவுண்டானா அமைத்து பராமரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, நகராட்சி பகுதிகளில் உள்ள எட்டு ரவுண்டானாக்கள், ஆறு மைய தடுப்புகள் அழகுப்படுத்தும் பணி சி.எஸ்.ஆர். நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
உடுமலை ரோடு தேர்நிலையம் ரவுண்டானாவில் யானை, மரப்பேட்டையில் மயில், காந்திசிலையில் ரேக்ளா போன்றவை அமைக்கப்படுகிறது. சப் - கலெக்டர் அலுவலகம் அருகே தென்னை மரங்கள், மாட்டு சந்தை ரவுண்டானாவில் மாடு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மற்ற ரவுண்டானாக்களில், பூங்கா, லைட்டிங் அமைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மூன்று ரவுண்டானாக்கள், சி.எஸ்.ஆர். நிதியில் பாரம்பரிய சின்னங்களுடன் அழகுபடுத்தப்பட உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அமைப்புகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. பொள்ளாச்சி நகரின் அழகை மேம்படுத்த அனைவரது ஒத்துழைப்பு அவசியமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

