/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி சத்துணவின் தரம் எப்படி இருக்கு? சுவை பட்டியல் பதிவேடு பராமரிப்பு
/
பள்ளி சத்துணவின் தரம் எப்படி இருக்கு? சுவை பட்டியல் பதிவேடு பராமரிப்பு
பள்ளி சத்துணவின் தரம் எப்படி இருக்கு? சுவை பட்டியல் பதிவேடு பராமரிப்பு
பள்ளி சத்துணவின் தரம் எப்படி இருக்கு? சுவை பட்டியல் பதிவேடு பராமரிப்பு
ADDED : நவ 14, 2025 09:23 PM
பொள்ளாச்சி: மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவையில் உள்ள குறைபாட்டைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில், சில பள்ளிகளில் 'சுவை பட்டியல் பதிவேடு' பராமரிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, வாரந்தோறும், குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு, சாப்பாடு மற்றும் சாம்பார், தக்காளி சாதம், புளி சாதம், சுண்டல் சாதம் அல்லது பாசிப்பயிறு சாதம் மற்றும் காய்கறி சாதம் வழங்கப்படுகிறது.
அதனுடன் தினமும், முட்டையும் வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முறையாக சமைக்கப்படுகிறதா என்பதை கண்டறியவும், அதன் தரத்தில் குறைபாடு உள்ளதா என அறியவும் சில அரசு பள்ளிதலைமையாசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
இதற்காக, பள்ளியில் 'சுவை பட்டியல் பதிவேடு' ஒன்றை பராமரிக்கின்றனர். அதில், ஒவ்வொரு நாளும், ஒரு ஆசிரியரைக் கொண்டு, உணவு தயாரிப்பு முறையைக் கண்காணிக்கவும், சமைத்த உணவை சுவை பார்த்து, நிறை, குறைகளை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் சத்துணவு வழங்க வேண்டும். அதன்படி, அரிசி, காய்கறிகளை பல முறை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இதற்கு, ஆசிரியர்களின் கண்காணிப்பும் அவசியம்.
அதேபோல், தினமும், ஆசிரியர்கள் சத்துணவை சாப்பிட்டு பார்ப்பர் என்று அறியப்பட்டால், அதன் தரத்தில் குறைபாடு இருக்காது. குறைகள் கண்டறியப்பட்டால், அதனை எளிதில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி, மாணவர்கள் சாதத்தை வீணாக்காமல், குறிப்பிட்ட அளவு வாங்கி முறையாக உட்கொள்வதையும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே, சுவை பட்டியல் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இத்தகையை நடவடிக்கையை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றினால், தரமான சத்துணவு மாணவர்களுக்கு கிடைப்பதுடன், உணவு வீணாகாது.
இவ்வாறு, கூறினர்.

