/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை காலத்தில் கால்நடைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை
/
மழை காலத்தில் கால்நடைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை
மழை காலத்தில் கால்நடைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை
மழை காலத்தில் கால்நடைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை
ADDED : நவ 02, 2025 08:30 PM
பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மழை, அதிக காற்று, இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க திறந்தவெளியில், மரங்களுக்கு கீழாக கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நனைந்த அடர் தீவனத்தை கால்நடைகளுக்கு அளிக்ககூடாது. மழை காலத்தில் பூஞ்சை தொற்றில்லாத அடர் தீவனத்தை அளிக்க வேண்டும். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களை சமவிகிதத்தில் அளிக்க வேண்டும்.
தொடர்ந்து மழை வெள்ளத்தில் நனையாதவாறு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். கால்நடை மற்றும் கோழிகளுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை அளிக்கலாம்.
அதிக நேரம் நீர் தேங்கிய இடங்களில் கட்டி வைப்பதை தவிர்ப்பதன் வாயிலாக குளம்பு அழுகல் நோயினை தவிர்க்கலாம். கால்நடை கொட்டகைகள் மழை நீர் ஒழுகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொட்டகை ஈரமாகவும், அசுத்தமாகவும் இருந்தால் மடி நோய் ஏற்படலாம் என்பதால், கிருமிநாசினி மற்றும் மூலிகைகளை கால்நடை டாக்டரின் அறிவுரை படி பயன்படுத்தலாம். முறையான குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
மழை பெய்யும் போது, ஆடுகளை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். உரிய காலத்தில் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

