ADDED : ஜன 28, 2025 11:40 PM
பெ.நா.பாளையம்; குறைந்த அளவு மக்கிய தொழு உரத்துடன், தேவையான அளவு மணிச்சத்தை நன்கு கலந்து ஒரு மாதம் பக்குவப்படுத்தி, விதைப்பின் போது தழைச்சத்து உரமான யூரியாவை, அத்துடன் நன்கு கலந்து உழவு சாலில் இடும் உரத்துக்கு, ஊட்டம் ஏற்றிய தொழு உரம் என்று பெயர்.
இந்த உரம் மணிச்சத்து கிட்டா நிலை அடைவதை தடுத்து, கிட்டும் நிலையை அடைய செய்கிறது. வேர்கள் நன்கு ஆழமாக வளர செய்கிறது. வறட்சியை தாங்குகிறது. பூச்சி, நோய்களின் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. திரட்சியான காய்கள் உருவாகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது.
ஒரு ஏக்கருக்கு தேவையான மக்கிய தொழு எரு, 300 கிலோ எடுத்து, அதில் உள்ள மக்காத பொருட்களை அகற்றி, கட்டிகளை உடைத்து விட வேண்டும்.
காய்ந்த நிலையில் இருந்தால், சிறிது தண்ணீர் தெளித்து, பதப்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடினமான தரையில் தொழு எருவை மூன்று சம பங்காக பிரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சூப்பர் பாஸ்பேட் ஒரு மூட்டை அதாவது, 50 கிலோ உரத்தையும் நன்றாக கலந்து, அதையும் மூன்று சம பாகங்களாக பிரிக்க வேண்டும். பின்பு ஒரு பங்கு தொழு எருவை வட்டமாக பரப்பி, அதன் மேல் ரசாயன உர கலவை ஒரு பங்கை கொட்டி வட்டமாக பரப்ப வேண்டும்.
இவ்வாறாக தொழு எரு, ரசாயன உரக்கலவை இவற்றை மாற்றி மாற்றி ஆறு அடுக்குகளாக கொட்டி, வட்ட வடிவில் பரப்ப வேண்டும். பின்பு சிமெண்ட் கலவை கலப்பது போல மண்வெட்டியால் தொழு எருவையும், ரசாயன உர கலவையையும் நன்கு கலக்க வேண்டும். அவ்வாறு கலந்த கலவையை பாதுகாப்பான ஒரு இடத்தில் குவித்து, ஈரமண்ணால் மூடி வைக்க வேண்டும் அல்லது உரசாக்குகளில் கட்டி வைக்கலாம்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் விதைப்புக்கு முன்பு தேவையான அளவு தழைச்சத்து தரக்கூடிய யூரியாவையும், சாம்பல் சத்து தரக்கூடிய பொட்டாஷ் உரத்தையும் சாலில் இட்டு, விதைப்பு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம் .

