/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம் உரிமையாளர்களாக முன்வந்து வரிசெலுத்த அறிவுரை
/
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம் உரிமையாளர்களாக முன்வந்து வரிசெலுத்த அறிவுரை
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம் உரிமையாளர்களாக முன்வந்து வரிசெலுத்த அறிவுரை
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம் உரிமையாளர்களாக முன்வந்து வரிசெலுத்த அறிவுரை
ADDED : நவ 29, 2024 11:20 PM
பொள்ளாச்சி: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, மூன்று ஆண்டு வரையிலான காலத்துக்கு தொழில் உரிமம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும், என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வணிக நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா என கண்காணிப்பு செய்து, அவற்றை முறைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதில், வீட்டுக்கான வரி செலுத்தி, வணிக நிறுவனங்கள் நடத்தியவர்கள் கண்டறியப்பட்டு, வரி முறைப்படுத்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சியில் வணிக தொழில் நிறுவனங்கள், தொழில் உரிம கட்டணம் செலுத்தாமலும், புதுப்பித்துக் கொள்ளாமலும் உள்ளன. அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், எந்தவொரு வர்த்தகம் அல்லது வியாபாரத்தையும், கமிஷனரால் வழங்கப்பட்ட உரிமம் இன்றி, நகராட்சி எல்லைக்குள் மேற்கொள்ள கூடாது. அத்தகைய உரிமம் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், நகராட்சியால் வரையறுக்கப்பட்ட கட்டணத்துடன், கமிஷனருக்கு சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணத்தை டிஜிட்டல் முறை மூலமாகவோ அல்லது வங்கி வரைவோலை வாயிலாகாவோ செலுத்தலாம்.
ஆவணம் அவசியம்
இதனுடன், தனிநபரை பொறுத்தவரை ஆதார் அட்டை மற்றும் நபர்களின் குழு அல்லது நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான கணக்கு எண் அட்டை அல்லது கூட்டுரிம சான்றிதழ் போன்ற அடையாள சான்றாக சேர்க்க வேண்டும்.
உரிமத்துக்கான வர்த்தகம் அல்லது வியாபாரத்தின் முகவரியை தெளிவாக காண்பிக்கும் குத்தகை பத்திரம் அல்லது வருமான ஒப்பந்தம் அல்லது சமீபத்திய சொத்து வரி ரசீது அல்லது சமீபத்திய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விபர அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
செல்லுபடியாக கூடிய முகவரிச்சான்று எதுவும் விண்ணப்பதாரரிடம் இல்லையெனில், அவர் படிவம், 17ல் பிரமாணம் செய்யப்பட்ட உறுதிமொழி ஆவணத்தை சமர்பிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என தொழில் நிறுவனங்களுக்கேற்ப உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தற்போது நடக்கிறது.
அபராத வரி
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது: நகராட்சியில் குடியிருப்பு என வரிவிதிப்பு செய்து, வணிக பயன்பாடாக செயல்பட்டு வரி ஏய்ப்பு செய்யும் கட்டடங்களுக்கு வணிகமாக மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தால் பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது, 90 சதவீத வணிக கட்டடங்கள் சொத்து வரி பயன்பாடு மாற்றம் செய்து முறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 சதவீதம் கட்டடங்களை ஆய்வு செய்து, அபராதத்துடன் சொத்து வரி விதிப்பு செய்ய, தனிக்குழு அமைத்துள்ளது.
அதே போன்று, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள், 2023ன் படி நகராட்சி எல்லைக்குள் செயல்படும் வணிக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் பெற்ற பின்னரே தொழில் செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் செயல்பட்டால், சட்ட விதிகளின்படி குற்றமாக கருதப்படும்.
உரிமம் பெறணும்
நகராட்சியில் மொத்தம் உள்ள, 5,443 வணிக நிறுவன கட்டடங்களில், 2,896 நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள, 2,547 நிறுவனங்களும் தொழில் உரிமம் பெற வேண்டும். விதிகளின்படி, மூன்று ஆண்டு வரையிலான காலத்துக்கு தொழில் உரிமம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொழில் வரி செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.