/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனை பின்பற்ற அறிவுரை
/
விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனை பின்பற்ற அறிவுரை
ADDED : ஆக 23, 2025 02:52 AM
அன்னுார்: 'விநாயகர் சதுர்த்தி விழாவில் 20 நிபந்தனைகளை பின்பற்ற போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹிந்து முன்னணி சார்பில், அன்னுார் வட்டாரத்தில், குன்னத்துார், கணேசபுரம், பொகலுார், மூக்கனுார், கரியாகவுண்டனுார், பசூர் உள்ளிட்ட 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து ஏற்பாடுகள் குறித்த அறிவுரை வழங்கும் கூட்டம் அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'விநாயகர் சிலைகளை களிமண், பேப்பர் கூழ், அல்லது மரவள்ளி கிழங்கால் மட்டுமே செய்து இருக்க வேண்டும்.
சிலை வைக்கப்பட்ட இடத்தில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனம், குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றில் விநாயகர் சிலைகளை ஏற்றி வரக்கூடாது. ஓலை கொட்டகைகள் அமைக்க கூடாது. மாலை 6:00 மணிக்குள் விசர்ஜன ஊர்வலத்தை முடிக்க வேண்டும்.
விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்கும் வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் உள்ளிட்ட 20 நிபந்தனைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.
ஹிந்து முன்னணி நிர்வாகிகள், எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்தை நடத்துவோம் என உறுதியளித்தனர்.