/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்துடைப்புக்கு நடக்குது உள்ளாட்சி வார்டு சபை செலவில்லாத தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுரை
/
கண்துடைப்புக்கு நடக்குது உள்ளாட்சி வார்டு சபை செலவில்லாத தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுரை
கண்துடைப்புக்கு நடக்குது உள்ளாட்சி வார்டு சபை செலவில்லாத தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுரை
கண்துடைப்புக்கு நடக்குது உள்ளாட்சி வார்டு சபை செலவில்லாத தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுரை
ADDED : அக் 28, 2025 01:20 AM
பொள்ளாச்சி: தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் வார்டு சிறப்பு கூட்டத்தில், செலவில்லாத தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால், உள்ளாட்சி அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு சிறப்புக் கூட்டங்களை நேற்று முதல் நாளை, 29ம் தேதி வரை மூன்று நாட்களில் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன் வாயிலாக, மக்களால் தெரிவிக்கப்படும் ஆலோசனை மற்றும் கருத்துக்களை பெற்று அதன் மீது உரிய காலக்கெடுவிற்குள் தீர்வு காணவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று, பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி பேரூராட்சிகளில், அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில், உள்ளாட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராகக் கொண்டு வார்டு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. வார்டு மக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வழங்கப்பட்டும் வரும் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, மரக்கன்று நடவு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் மற்றும் சாலை பராமரிப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட செயல்பாடு, சுகாதாரம், நீராதாரங்களை பாதுகாத்தல் என, குறிப்பிட்ட ஒன்பது இனங்களில் விவாதிக்கப்பட்டது.
அதன்பின், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களில், முன்னுரிமை அடிப்படையில் மூன்று தீர்மானம் தேர்வு செய்யப்பட்டது. நாளை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதும், அந்தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது.
ஆனால், முன்னுரிமை அடிப்படையில் செலவில்லாத தீர்மானங்களை (வார்டுக்கு) மட்டுமே பதிவு செய்யுமாறு, உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் உள்ளாட்சி அதிகாரிகள் திணறுகின்றனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில், மூன்று நாட்களில் மக்களின் பிரச்னைகளை கோரிக்கையாக பெறப்பட்டு, தீர்வு காண வார்டு சிறப்பு கூட்டம் நடத்துவது வெறும் கண்துடைப்பு என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூறியதாவது:
பெறப்பட்ட தீர்மானங்கள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகள் இயக்குநரகம் வாயிலாக 'முதல்வரின் முகவரி' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. பதிவேற்றம் செய்த பின், தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே அதிக நிதிச்சுமை இன்றி செய்யக் கூடிய மூன்று தீர்மானங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டதால், பல பேரூராட்சிகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை.
சிலர், கட்சி தலைமையிடம் நற்பெயர் வாங்கி, அடுத்த தேர்தலிலும் தனக்கான இடத்தை நிலை நிறுத்தும் நோக்கில், வார்டு சிறப்பு கூட்டம் நடத்தி உள்ளனர்.
நான்கு ஆண்டுகளாக வார்டுகள் தோறும் வலம் வரும் கவுன்சிலர்களுக்கு, அந்தந்த பகுதியில் நிலவும் பிரச்னை குறித்து தெரியாமல் இருக்குமா. இத்தனை நாட்கள் தீர்க்கப்படாத பிரச்னைக்கு மூன்று நாட்கள் நடத்தப்படும் வார்டு சிறப்பு கூட்டம் வாயிலாக தீர்வு கிடைக்கும் என்பது வெறும் கண்துடைப்பு.
இவ்வாறு, கூறினர்.

