/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்காலத்தில் மின் விபத்துக்களை தடுக்க அறிவுரை
/
மழைக்காலத்தில் மின் விபத்துக்களை தடுக்க அறிவுரை
ADDED : ஆக 29, 2025 10:20 PM
பெ.நா.பாளையம்; மின் விபத்துக்களை தடுக்க பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தரமான, ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்த ஒயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கேபிள் 'டிவி' ஒயர்களை, உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஸ்விட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும்.
குளியல் அறையிலும், கழிப்பறையிலும், ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. மழைக்காலங்களில், மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.
உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை வெட்டுவதற்கு, மின்வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும்.மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை, தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது, என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.