/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை! கனமழையால் வெள்ளத்தில் கவனம்
/
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை! கனமழையால் வெள்ளத்தில் கவனம்
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை! கனமழையால் வெள்ளத்தில் கவனம்
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை! கனமழையால் வெள்ளத்தில் கவனம்
ADDED : அக் 15, 2024 10:30 PM

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், குளம், குட்டை, பள்ளம் சிற்றோடைகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, வருவாய் துறையினர், போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெருக்கெடுக்கும் நீர்
பெரியநாயக்கன்பாளையம் அருகே தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலையில் பெய்யும் மழை நீர், தடாகம் பெரியபள்ளம் வழியாக சோமையம்பாளையம் தடுப்பணையை நிறைத்து, கணுவாய் மேல் தடுப்பணை வழியாக கீழ் தடுப்பணை நோக்கி வழிந்து ஓடுகிறது.
தடாகம் வட்டாரத்தில் உள்ள வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட மலையோர கிராமங்களில் உள்ள பள்ளம், கொடிக்கால் பள்ளம், சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று மதியம் பெய்த கனமழையால் பழனிக்கவுண்டன்புதூர் தடாகம் ரோட்டில் தாளியூர் அருகே உள்ள பள்ளத்தில் வெள்ளம் பெருகியதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'தொடர்ந்து மழை பெய்து வருவதால், தடாகம் வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் தேவையில்லாமல் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் மின்கம்ப ஒயர் அறுந்து தரையில் கிடக்க வாய்ப்புள்ளதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும். கணுவாய், பன்னிமடை இடையே உள்ள கணுவாய் மேல் தடுப்பணை நிறைந்து, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த வழியில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மழையால் பாதிப்பு இருந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.
மழை நீர் தேக்கம்
அன்னூர் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
தாசில்தார் குமரி ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ, இட்டேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த முறை மழை வந்தபோது தேங்கிய நீர், மாத கணக்கில் வெளியேற்றப்படவில்லை. நாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினோம். இந்த முறையாவது மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். தாசில்தார் கூறுகையில், 'மழை நீர் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.
தாழ்வான பகுதியில் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- நமது நிருபர் குழு-