/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனை குழுவினர் ஆய்வு
/
சூலுார் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனை குழுவினர் ஆய்வு
ADDED : ஏப் 02, 2025 10:26 PM

சூலுார்; சூலுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை, என, ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர்.
சூலுார் ரயில்வே ஸ்டேஷன் முத்துக்கவுண்டன் புதூரில் உள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக சூலுார் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தினமும், 40 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இந்த ஸ்டேஷனை கடந்து செல்கின்றன.
இந்நிலையில், ஸ்டேஷனில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, சேலம் கோட்டம், சூலுார் ஸ்டேஷன் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ரவிக்குமார், கார்த்திகேயன், சண்முகம், பூங்கொடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ரயிலுக்கு காத்திருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டனர். இதுகுறித்து ஆய்வு குழுவினர் கூறியதாவது:
வடபுறம் உள்ள நடைமேடையில் குடிநீர் வசதி மற்றும் மேற்கூரை வசதி இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில், பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில் சூலுார் ஸ்டேஷனில் நின்று செல்வதில்லை.
கோவை-சேலம் இடையிலான மெமு ரயில் நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை. ஒரு நடை மேடையில் இருந்து மற்றொரு நடை மேடைக்கு பயணிகள் செல்ல வசதி இல்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.
இந்த தேவைகளை நிறைவேற்றி தர, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என, உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.