/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு: இன்ஜினியர்ஸ் சங்கம் மனு கொடுத்து 'அலர்ட்'
/
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு: இன்ஜினியர்ஸ் சங்கம் மனு கொடுத்து 'அலர்ட்'
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு: இன்ஜினியர்ஸ் சங்கம் மனு கொடுத்து 'அலர்ட்'
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு: இன்ஜினியர்ஸ் சங்கம் மனு கொடுத்து 'அலர்ட்'
ADDED : பிப் 12, 2024 08:35 PM
பொள்ளாச்சி:கிரஷர் ஜல்லி உற்பத்தி சார்ந்த பொருட்கள் விலை திடீர் உயர்வால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்ஜினியர்ஸ் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசு மற்றும் தனியார் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, ஆற்று மணலுக்கு மாற்றாக, அரசு எம்.சாண்ட் பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஜினியர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
'இன்ஜினியர்ஸ் கிளப் பொள்ளாச்சி' நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன், வேலுசாமி ஆகியோர் தலைமையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது:
டீசல் விலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு இல்லாத நிலையில்,ஒரு வாரத்தில் கிரஷர், ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டடப்பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலையை அபரிதமாக உயர்த்தியுள்ளனர். இதனால், கட்டுமான பணி ஸ்தம்பித்துள்ளது.
கட்டடம் கட்டுவதற்கு இதுவரை சதுர அடிக்கு, 2,350 ரூபாயாக இருந்தது. தற்போது விலை உயர்வால், சதுர அடிக்கு, 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சதுர அடிக்கு, 2,550 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; வீடு கட்டும் மக்கள் மீது கூடுதல் சுமையை வைப்பதால் கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்படும். புதியதாக வீடு கட்டுவோரின் கனவு பொய்த்து விடும் சூழல் உள்ளது.
பொள்ளாச்சியில் மட்டும், கட்டுமான பணியை நம்பியுள்ள, 350க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கட்டுமானப்பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்களையும் இந்த விலையேற்றம் பாதித்துள்ளது.
ஆற்று மணலுக்கு மாற்றாக, எம்.சாண்டை பயன்படுத்தி வருகிறோம். தற்போது, இந்த விலையேற்றத்தால், ஆற்று மணல் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் நல்ல நோக்கம் தடைபடுவது போன்றுள்ளது.
எனவே, அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.