/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
/
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 26, 2025 11:23 PM

மேட்டுப்பாளையம்: -: ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் பராமரிக்கப்படும் 2,200 பன்றிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடை துறை உயர் அதிகாரிகள் பன்றி பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் கோட்டையம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நோய் பரவலை தடுக்க வளர்ப்பு பன்றிகள் அங்கு கொல்லப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த மாதம் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் 5க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்தது. இதை தொடர்ந்து அங்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள கேரளா மாநில எல்லைப்பகுதிகளில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 36 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கேரளாவில் இருந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பன்றிகள், தீவனங்கள் கொண்டுவரப்படும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை கால்நடை நோய் நிகழ்வியல் மையத்தில் இருந்து, நோய் நிகழ்வியல் அலுவலர் மருத்துவர் சித்ரா அண்மையில் கோவை வந்து புறநகர் பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகள் மற்றும் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து, கால்நடை துறையின் கோவை மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பன்றி பண்ணைகளில் 2,200 பன்றிகள் பராமரிக்கப்படுகிறது. அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், பன்றிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
பண்ணைகளில் உள்ள பன்றிகள், திடீரென தீவனம் சாப்பிடாமல், காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, இறப்பு, இறப்புக்கு பின் ரத்த கசிவு ஏற்படுகிறதா என பன்றி பராமரிப்பாளர்களிடம் கேட்டறியப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

