/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
11 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் அத்திக்கடவு நீர்
/
11 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் அத்திக்கடவு நீர்
11 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் அத்திக்கடவு நீர்
11 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் அத்திக்கடவு நீர்
ADDED : டிச 03, 2025 07:31 AM

அன்னுார்: 11 மாதங்களுக்குப் பிறகு அன்னுார் குளத்திற்கு நேற்று அத்திக்கடவு நீர் வந்தது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 119 ஏக்கர் குளமும் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு திட்டத்தால் கடந்த ஆண்டு இந்தக் குளத்தில் 50 சதவீதம் நீர் சேர்ந்தது. இதையடுத்து தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மழை நீரும், அத்திக்கடவு நீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் தேங்கி நின்றன. இதனால் வீட்டுச் சுவர்கள் பலம் இழந்தன. பயிர்கள் அழுகின. எனவே பேரூராட்சி சார்பில் அத்திக்கடவு திட்ட அதிகாரிகளிடம் அன்னுார் குளத்திற்கு அத்திக்கடவு நீர் விட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து கடந்த ஆண்டு அன்னுார் குளத்திற்கு அத்திக்கடவு நீர் விடுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அன்னுாரில் மேற்குப் பகுதியில் வடவள்ளி, காரேகவுண்டம் பாளையம், பொகலூர் ஆகிய ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் செல்வதில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது அன்னுார் குளத்திற்கு தண்ணீர் சென்றால் மட்டுமே இதை அடுத்து மேற்கு பகுதியில் உள்ள குளத்திற்கும் தண்ணீர் செல்லும் என கண்டறிந்தனர்.
இதை அடுத்து அன்னுார் குளத்திற்கு பொருத்தப்பட்ட குழாய் மாற்றி பதிக்கப்பட்டது. 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் சிறிதளவு தண்ணீர் குளத்திற்கு விடப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை மிக அதிக அழுத்தத்துடன் குளத்திற்கு அத்திக்கடவு நீர் விடப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'குளத்தில் உள்ள நீரால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனினும் குளத்தில் குப்பைகள் கொட்டாமல் தடை செய்ய வேண்டும். குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலக்காமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் குளத்தில் தூய்மையான நீர் தேங்கும்,' என்றனர்.

