/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 ஆண்டுக்கு பின் ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
/
20 ஆண்டுக்கு பின் ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
20 ஆண்டுக்கு பின் ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
20 ஆண்டுக்கு பின் ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 17, 2024 10:24 PM

தொண்டாமுத்தூர்; பச்சினாம்பதியில் உள்ள ஊத்துப்பள்ளம் தடுப்பணையை, சிறுதுளி அமைப்பு தூர்வாரி புனரமைத்ததால், 20 ஆண்டுகளுக்குப்பின் தடுப்பணையில் நீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலாந்துறை பேரூராட்சிக்குட்பட்ட பச்சினாம்பதி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஊத்துப்பள்ளம் நீரோடை உற்பத்தியாகி, பச்சினாம்பதி வழியாக முண்டாந்துறை ஓடையில் இணைகிறது.
இந்த ஊத்துப்பள்ளம் ஓடையில், ஆண்டு முழுவதும் நீர் வற்றாத ஓடையாக உள்ளது. பச்சினாம்பதி, பெருமாள்கோவில்பதி, வலையங்குட்டை பகுதியில், சுமார், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பச்சினாம்பதியில், ஊத்துப்பள்ளம் ஓடையில் வரும் நீரை சேமிக்க, பொதுப்பணித்துறை சார் பில், கடந்த, 2004ம் ஆண்டு, தடுப்பணை கட்டப்பட்டது.
அத்தடுப்பணை உரிய பராமரிப்பு இல்லாததால்,பலவீனமானது. இதனையடுத்து, இப்பகுதி விவசாயிகள், கோரிக்கையை ஏற்று தடுப்பணையை தூர்வாரி புனரமைக்க, சிறுதுளி அமைப்பு முன் வந்தது. இதனையடுத்து, கலெக்டர் கிராந்தி குமார், தூர்வாரி, புனரமைக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கினார்.
இதனையடுத்து, சிறுதுளி அமைப்பினர், 28.5 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊத்துப்பள்ளம் தடுப்பணையில், 1 கி.மீ., நீளத்திற்கும், 15 அடி ஆழத்திற்கும் தூர்வாரி, புனரமைத்தனர். ஓடையில் தூர்வாரும் போது கிடைத்த கற்களை கொண்டு, தடுப்பணைக்கு முன்பு மூன்று இடங்களில், மலையில் இருந்து வரும் நீரில், மண்ணை வடிகட்டி, நீர் மட்டும் தடுப்பணைக்கு வரும் வகையில் அமைத்துள்ளனர்.
இதனால், இப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணையில் நீர் தேங்கியுள்ளதால் சுமார், 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளது.
''தடுப்பணையை தூர் வாரும்போது, கிடைத்த மண்ணை, 200க்கும் மேற் பட்ட விவசாயிகள், தங்களின் விளைநிலங்களுக்கு பயன்படுத்தியதால், வளமான மண்ணும் எங்களுக்கு கிடைத்துள்ளது,என்றனர்.