/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவுண்டரி மண்ணால் விவசாய நிலங்கள் பாதிப்பு
/
பவுண்டரி மண்ணால் விவசாய நிலங்கள் பாதிப்பு
ADDED : ஆக 29, 2025 10:14 PM
கோவில்பாளையம்; 'கிணற்றில் கொட்டப்படும் பவுண்டரி மண்ணால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது,' என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கரியாம்பாளையம் உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி அளித்த மனுவில் கூறியுள்ள தாவது :
கள்ளிப்பாளையம் ஊருக்கு வடபுறம் பட்டா நிலத்தில் லோடு கணக்கில், சுத்திகரிக்கப்படாத பவுண்டரி கழிவு மண் கொட்டப்படுகிறது. இதேபோல் குன்னத்தூர் ஊராட்சி, நாதே கவுண்டன்புதூரிலும், கவுசிகா நதி ஓரத்திலும், பள்ளங்களிலும், சுத்திகரிக்கப்படாத கருப்பு மண் கொட்டப்படுகிறது.
இந்த மண்ணில் விழும் மழை நீர் கருப்பு மண் மீது விழுந்து ஓடி அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் பாய்கிறது. இதனால் விவசாய நிலம் ரசாயனம் கலந்து மாசடைகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கருப்பு மண் கொட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு மண் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.