/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வேளாண் விஞ்ஞானிகள் பயிலரங்கம்
/
கோவையில் வேளாண் விஞ்ஞானிகள் பயிலரங்கம்
ADDED : மே 30, 2025 12:17 AM
கோவை, ; மத்திய அரசின் 'வளர்ச்சியடைந்த வேளாண் உறுதி இயக்கத்தின்' கீழ், கிராமப்புற விவசாயிகளை நேரடியாக சந்திக்கும் திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்கு, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் பயிலரங்கு நடந்தது.
மத்திய அரசு, வளர்ச்சியடைந்த வேளாண்மைக்கான திட்டத்தை -வி.கே.எஸ்.கே., நேற்று துவக்கியது. ஜூன் 12 வரை அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இதன்படி, வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பர். கிராமப்புறம், எல்லையோரம் மற்றும் அதிகம் கவனிக்கப்படாத பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து, காரிப் பருவ சாகுபடிக்கு அறிவியல்பூர்வமாக அவர்களைத் தயார்படுத்துவர். இத்திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்கு, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், பயிலரங்கு நடந்தது.
பயிலரங்கில், கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தராஜ் பேசியதாவது: இந்த இயக்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 113 நிறுவனங்கள், 731 கே.வி.கே., வேளாண் பல்கலைகள், மாநில வேளாண் துறை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளத்துறை வாயிலாக நாடுமுழுதும் செயல்படுத்தப்படுகிறது.
விஞ்ஞானிகள், விவசாயிகளை நேரில் சந்தித்து, காரிப் பருவத்தில், அந்தக் குறிப்பிட்ட வேளாண் பருவ நிலைக்கு ஏதுவான, பிரதான பயிர்கள் என்னென்ன, அவர்கள் பின்பற்ற வேண்டிய மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். 'ஆய்வகத்தில் இருந்து நிலத்துக்கு' திட்டத்தின்கீழ், புதுமையான தொழில்நுட்பங்கள், அறிவியல் ரீதியான பண்ணை நடைமுறைகள் குறித்து விளக்குவர். பண்ணைத் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாது, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப், மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (அரசின் திட்டங்கள்) புனிதா, எஸ்.பி.ஐ., வங்கியின் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் ரம்யா ஆகியோர் திட்ட நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினர்.