ADDED : அக் 02, 2025 12:38 AM

பாரம்பரிய ரக பயிற்சி
கோவை வேளாண் பல்கலை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில், 'கிராண்ட் சேலஞ்ச் கனடா' நிதியுதவியுடன் பாரம்பரிய ரகங்களை பற்றி தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி துவக்கி வைத்தார்.
வேளாண் வானிலையியல் உதவி பேராசிரியர் கோகிலவாணி, பாரம்பரிய ரகங்களில் உள்ள தாதுப்பொருட்கள், அவற்றை மதிப்புக்கூட்டுதல் குறித்து விவரித்தார்.
வேளாண் கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரம்பரிய பனிவரகு ரகங்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தனித்திறன் மேம்பாடு
வேளாண் பல்கலை உயிர்தொழில்நுட்பவியல், உயிரி தகவலியல் மாணவர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. 88 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம், தலைமைத்திறன், தொடர்பியல் திறன், இலக்கு நிர்ணயம், தனிநபர் மேம்பாடு, தொழில்முறை ஒழுக்கம் குறித்த தனித்திறன் மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி, செயல்வழிக் கற்றல் முறையில் வழங்கப்பட்டது.
மூலக்கூறு பயிற்சி
வேளாண் பல்கலை, தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தகவலியல் துறை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையம் சார்பில், மூலக்கூறு மாதிரியாக்கம், பொருந்துதல் மற்றும் உருவகப்படுத்துதல் தொடர்பான செயல்விளக்க பயிற்சி நடந்தது.
பல்வேறு பல்கலைகள், வனக்கல்லுாரி, பல் மருத்துவக்கல்லூரி, இன்ஜி., கல்லூரிகளில் இருந்து முதுநிலை மற்றும் ஆய்வு மாணவர்கள்பங்கேற்றனர். காக்ஸ்பிட் இயக்குனர் செந்தில், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, துறை தலைவர் அருள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.