/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரையில் சோளம் சாகுபடி வேளாண்துறை அறிவுரை
/
சித்திரையில் சோளம் சாகுபடி வேளாண்துறை அறிவுரை
ADDED : ஏப் 18, 2025 11:28 PM
பெ.நா.பாளையம்: சித்திரையில் சோளம் சாகுபடி செய்து, விவசாயிகள் பயன் பெற வேண்டுமென, வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 611 மி.மீ., மழை பெய்கிறது. சென்ற, 2024ம் ஆண்டு, 822 மி.மீ., மழை பெய்துள்ளது. கூடுதலாக, 211 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் கோடைகால சித்திரை பட்ட சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது. எனவே, சித்திரை மாதத்தில் குறைந்த அளவு நீரிலேயே மகசூல் தரும் சோளம் சாகுபடி செய்யலாம். சித்திரை பட்டத்துக்கு ஏற்ற ரகங்கள் கோ32 மற்றும் கே12 ரகங்கள் ஆகும். கோ32 ரகம், 110 நாட்கள் வயது உடையது.
இறவை சாகுபடிக்கு ஏற்றது. புரதம், 14.66 சதவீதம், நார்ச்சத்து, 5.8 சதவீதமும் உடையது. 2.5 ஏக்கருக்கு, 3,100 கி.கி., தானிய மகசூல் தரவல்லது. தட்டு மகசூல், 1,153 கி.கி., கிடைக்கும். இறவை சாகுபடிக்கு, 2.5 ஏக்கருக்கு, 10 கி.கி., விதை தேவைப்படும். விதை நேர்த்தி செய்த விதைகளை, 1.5 அடி பார்களில் அரை அடி இடைவெளியில் ஊன்ற வேண்டும்.
அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு, சோளம் விதைகள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் ப்ளுரேசன்ஸ், தானிய நுண்ணோட்டங்கள் பெற்று பயன்பெறுமாறு, கோவை வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

