/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழியில் சோளம் சாகுபடி வேளாண்துறை அறிவுரை
/
மார்கழியில் சோளம் சாகுபடி வேளாண்துறை அறிவுரை
ADDED : ஜன 01, 2025 05:55 AM
பெ.நா.பாளையம் : கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 26 ஆயிரத்து, 88 எக்டரில் இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
இறவை பாசனத்தில் நடப்பு மார்கழி பட்டத்தில் சராசரியாக, 369 எக்டர் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு மார்கழி பட்டத்துக்கு உயர் விளைச்சல் தரக்கூடிய சோளம் கோ32 மற்றும் கே12 ரகங்களை பயன்படுத்தலாம்.
கோ32 ரகம், 110 நாட்கள் வயது உடையது. 2.50 ஏக்கருக்கு, 3,100 கி.கி., தானிய மகசூல் தரக்கூடியது. தட்டு மகசூல், 11,453 கிலோ கிராம் கிடைக்கும். சுவைமிக்க தட்டு ஆகும். கே12 ரகம், 2.5 ஏக்கருக்கு, 3,500 கி.கி., தானிய மகசூல் தரவல்லது.
இவ்விதைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில், 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு, 50 சதவீதம் அல்லது கிலோவுக்கு, 30 ரூபாய் இதில் எது குறைவோ அந்த அளவு மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. விதைப்பு செய்யும் முன், விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்கள் பெற, அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு சோளத்தில் கூடுதல் மகசூல் பெற்று பயனடையுமாறு கோவை வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிவித்துள்ளார்.