/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரைப் பட்டத்தில் சோளம் சாகுபடி; அழைப்பு விடுக்கிறது வேளாண் துறை
/
சித்திரைப் பட்டத்தில் சோளம் சாகுபடி; அழைப்பு விடுக்கிறது வேளாண் துறை
சித்திரைப் பட்டத்தில் சோளம் சாகுபடி; அழைப்பு விடுக்கிறது வேளாண் துறை
சித்திரைப் பட்டத்தில் சோளம் சாகுபடி; அழைப்பு விடுக்கிறது வேளாண் துறை
ADDED : ஏப் 23, 2025 06:34 AM
கோவை : சித்திரைப்பட்ட சோளம் சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு சராசரியை விட, 211 மி.மீ., கூடுதலாக மழை பொழிந்தது. இதனால், கிணறு, ஆழ்துளை கிணறுகளில்   கோடை கால சித்திரைப் பட்ட சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் உள்ளது. குறைந்த அளவு நீரிலேயே, மகசூல் தரும் சோள சாகுபடியை மேற்கொள்ளலாம்.  கோ 32, கே 12 ரகங்கள் சித்திரைப் பட்டத்துக்கு ஏற்றவை. கோ 32 ரகம் 110 நாட்கள் வயதுடையது. இறவை சாகுபடிக்கு ஏற்றது.
புரதம் 14.66 சதவீதம். நார்ச்சத்து 5.8 சதவீதம். 2.5 ஏக்கருக்கு, 3,100 கிலோ மகசூல் தர வல்லது. தட்டு மகசூல் 11,453 கிலோ கிடைக்கும். இறவை சாகுபடிக்கு ஹெக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.
விதை வாயிலாக பரவக்கூடிய நோய்களைத் தடுக்க, 10 கிலோ விதைக்கு 100 கிராம் சூடோமோனஸ் புளூரசென்ஸ், திரவ உயிர் உரம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தலா 50 மில்லி வீதம் விதையுடன் கலந்து, விதைப்பு செய்ய வேண்டும்.
கடைசி உழவுக்கு முன், இறவை சாகுபடியில் அடியுரமாக 2.5 ஏக்கருக்கு யூரியா 100 கிலோ, சூப்பர் 279 கிலோ, பொட்டாஷ் 72 கிலோ கலந்து இட வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை 1.5 அடி பார்களில், அரை அடி இடைவெளியில் ஊன்ற வேண்டும். இதனால், ஏக்கருக்கு 60,000 பயிர்கள் கிடைக்கும்.
விதைத்த 3 நாட்களுக்குள், பயிருக்குத் தேவையான 11 நுண்ணூட்டங்களான கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, போரான், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம், குளோரின் ஆகியவைகளை வழங்கும், தானிய நுண்ணூட்டச்சத்தை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் மணலுடன் கலந்து, மண்ணின் மேலாக இட வேண்டும். மண்ணுக்குள் கலந்தால், பயிருக்கு நுண்ணூட்டம் கிடைக்காது.
மேற்கூறிய அனைத்து இடுபொருட்களும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, 'உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானிய திட்டத்தில்' மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பெற்று பயனடையலாம், என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

