/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய வேலைகள் இனி ரொம்ப 'ஈசி' நிரூபிக்கிறது; 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி
/
விவசாய வேலைகள் இனி ரொம்ப 'ஈசி' நிரூபிக்கிறது; 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி
விவசாய வேலைகள் இனி ரொம்ப 'ஈசி' நிரூபிக்கிறது; 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி
விவசாய வேலைகள் இனி ரொம்ப 'ஈசி' நிரூபிக்கிறது; 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி
ADDED : ஜூலை 12, 2025 01:49 AM

கோவை; கொடிசியா நடத்தும், 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விவசாய வேலைகளை எளிதாக்கும் இயந்திரங்கள், விவசாயிகளை கவர்கின்றன.
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, கண்காட்சிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு இலவசம். பிற பார்வையாளர்களுக்கு 50 ருபாய் நுழைவு கட்டணம். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று, தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி, கேரளாவிலிருந்தும் விவசாயிகள் பார்வையிட வந்தனர். கருவிகளின் நவீனம், விவசாயிகளை ஈர்த்துள்ளது.
நீர்ப்பாசனம்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இருந்தாலும், முறையான நீர்பாய்ச்சுதல் கடினமானதாகவே இருந்து வந்தது. எந்த நேரத்தில் விவசாயத்திற்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வரும் என காத்திருக்க வேண்டியிருந்தது.
இதற்கு தீர்வாக, விவசாயிகளுக்கு மின்சாரம் வந்தவுடன் பம்ப் செட் தானாக இயங்கவும், அவற்றை மொபைல் போனில் கட்டுப்படுத்தவும், ரிமோட் கருவிகள் வந்துள்ளன. நிலத்துக்குள் சென்று நீர்ப்பாய்ச்சும் பிரச்னையை தீர்க்க, சொட்டுநீர் பாசன முறை கைகொடுத்துள்ளது. சொட்டு நீர் பாசன முறை மட்டுமின்றி, விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம், உரமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயிருக்கு தேவையான உரங்களை ஆய்வு செய்து, அவற்றின் அளவை நேரடியாக கிடைக்கவும், சொட்டுநீர் பாசனம் பயன்படுகிறது.
பண்ணை கருவிகள்
நிலத்தை சமன் செய்யவும், பாத்தி, பார்களை உருவாக்க டிராக்டருடன் இணைப்பாக பல்வேறு கருவிகள் வந்துள்ளன. கடினமான உழவு முறைகளை, இந்த கருவிகள் எளிதாக்குகின்றன. குறிப்பாக, டிராக்டர்களில் பல இணைப்புகள் பல்வேறு பணிகளுக்கு பயன்படுகின்றன.
டீசல் விலை உயர்வால், விவசாயத்துக்கு உழவு கூலி அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, 'மின்சார டிராக்டர்' விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
முருகப்பா குழுமம் சார்பில், மான்ட்ரா எனும் இரண்டு வகையான டிராக்டர்கள் அறிமுகம் செய்துள்ளது.
29 எச்.பி., செயல் திறன்மிக்க இந்த டிராக்டரை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் பயன்படுத்தமுடியும். டீசல் டிராக்டருக்கு இணையான செயல்பாடுகளை செயல்படுத்த முடியும்.
எரிபொருள் மிச்சம்
டீசலுக்கு பயன்படும் செலவில், 5ல் ஒரு பங்கு தான் இதற்கு செலவாகும். இந்த டிராக்டர், எரிபொருள் மிச்சப்படுத்துவதால், 3 ஆண்டுகளில் முதலீட்டை சேமித்து விட முடியும். இந்த டிராக்டரை, விவசாயிகள் ஆர்வமுடன்பார்வையிட்டு வருகின்றனர்.
விவசாயத்தை எளிதாக்கும் தொழில்நுட்பங்கள் பல, கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் ஆள் பற்றாக்குறையை தீர்க்க, கண்காட்சியில் தீர்வுகள் பல இடம் பெற்றுள்ளன. வரும் 15ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெறலாம்.