ADDED : மார் 27, 2026 06:52 AM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி.
காரமடை, மேட்டுப்பாளையம், கூடலூர் ஆகிய மூன்று நகராட்சிகளும், சிறுமுகை, வீரபாண்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகளும், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிலிச்சி ஊராட்சியும், இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
மூன்று லட்சத்து, 13 ஆயிரத்து, 810 வாக்காளர்கள் இருந்தனர். 34,345 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது 2 லட்சத்து, 79 ஆயிரத்து, 465 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் ஒரு லட்சத்து, 33 ஆயிரம், பெண்கள் ஒரு லட்சத்து, 46 ஆயிரம், மூன்றாம் பாலினம் 34 பேர் அடங்குவர். ஆண்களை விட பெண்கள், 13 ஆயிரத்து 355 அதிகம்.
தொகுதியில் தொழிற்சாலைகள், நூல் மில்கள், சிறு தொழில் நிறுவனங்கள் அதிகம் இல்லை. இரண்டு சிறிய நூல் மில்கள், ஒரு பழைய பேப்பர் மில் மற்றும் காய்கறி மண்டிகள், உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் விவசாயத்தையும், விவசாய கூலி வேலையையும், கட்டட வேலைகளையும் மட்டுமே நம்பியுள்ளனர்.
இதுவரை, 16 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. அ.தி.மு.க. 9 முறை, காங்கிரஸ் 4 முறை, தி.மு.க. 2 முறை, சுயேச்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 2001 முதல் இந்த தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றி வருகிறது. அதனால் மேட்டுப்பாளையம் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டை என்கின்றனர்.
தொகுதிகளில் ஒக்கலிக்கர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்து பட்டியல் இனத்தவர் உள்ளனர். முஸ்லிம், செட்டியார், வளையர், கிறிஸ்தவர் என பல பிரிவு சிறுபான்மையினர் உள்ளனர். ஒக்கலிக்கர் பெரும்பான்மை உள்ளதால், 2 கட்சிகளிலும் ஒக்கலிகர் போட்டியிட்டால், கடுமையாக போட்டி நிலவும். ஒரு கட்சி மட்டும் ஒக்கலிக்கர் போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது சுலபம்.
கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் சின்னராஜ், தி.மு.க., சார்பில் சுரேந்திரனும் போட்டியிட்டனர். இருவரும் ஒரே சமூகத்தினர். இதில் அ.தி.மு.க. 16,114 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. 2021ல் அ.தி.மு.க. சார்பில் செல்வராஜ், தி.மு.க. சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிட்டனர். இருவரும் ஒரே சமூகத்தினர். இதில் தி.மு.க.வை விட, அதிமுக 2,456 ஓட்டு அதிகம் பெற்று வெற்றி பெற்றது.
2024 நீலகிரி லோக்சபா தேர்தலில், மேட்டுப்பாளையம் தொகுதியில், தி.மு.க. 96 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ. கூட்டணி இல்லை. அ.தி.மு.க. 54 ஆயிரம் ஓட்டுகளும், பா.ஜ. 52 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றிருந்தன. தற்போது இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், இருவரின் ஓட்டுகளையும் கூட்டும் பொழுது, ஒரு லட்சத்து 6 ஆயிரம் ஓட்டுகள் வரும். இது தி.மு.க. பெற்ற ஓட்டுக்களை விட, 10 ஆயிரத்து, 607 அதிகம். இம்முறை அ.தி.மு.க.வும், பா.ஜ.வும் கூட்டு சேர்ந்து இருப்பது, இரண்டு கட்சியினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
அதே நேரத்தில் தி.மு.க. வில் ஒக்கலிக்கர் சமூகத்தினருக்கு சீட்டு ஒதுக்கினால், போட்டி கடுமையாக இருக்கும்.
