/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : அக் 02, 2025 12:24 AM

மேட்டுப்பாளையம்; தங்கள் வார்டுகளில், டெண்டர் விட்ட பணிகள் செய்யாமல் உள்ளதை அடுத்து, சிறுமுகை பேரூராட்சி மன்ற கூடத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
சிறுமுகை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மாலதி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மாலா, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர்.
கூட்டம் முடிந்த பின், சாந்தி (அ.தி.மு.க.,): எனது, 12வது வார்டில் பொது நிதியில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு, டெண்டர் விட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் பணிகள் துவக்கவில்லை. பலமுறை மன்ற கூட்டத்தில் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறேன், என்றார்.
அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமார், சுந்தரி, சூரிய பிரகாஷ் ஆகிய மூவரும், எங்களது வார்டுகளிலும், பணிகள் முடிக்காமல் உள்ளன. அதனால் நிர்வாகத்தை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டம் செய்கிறோம் என அறிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேரும் மன்ற கூடத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில்,' பேரூராட்சியில் அம்ருத் குடிநீர் திட்ட குழாய் பதித்த சாலைகளில், பல பகுதிகளில் கான்கிரீட் கலவை பேட்ச் ஒர்க் போடாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக வாகனங்கள் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதேபோன்று வார்டுகளில் பொது நிதியில், மழை நீர் வடிகால் கட்ட டெண்டர் எடுத்து பல மாதங்களாகியும், இன்னும் வேலைகள் நடைபெறவில்லை. பேரூராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே அ.தி.மு.க., கவுன்சிலரின் வார்டுகளை புறக்கணிக்கிறது, என கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, பேரூராட்சி தலைவர் மாலதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பொது நிதி டெண்டர் பணிகளை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அம்ருத் பேட்ச் ஒர்க் வேலையை நெடுஞ்சாலை துறை நிர்வாகம் செய்ய, அவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும், என கூறியதை அடுத்து, நான்கு கவுன்சிலர்களும் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.