/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் பேச்சாளர்களை களமிறக்கும் அ.தி.மு.க.
/
இளம் பேச்சாளர்களை களமிறக்கும் அ.தி.மு.க.
ADDED : ஆக 24, 2025 06:21 AM
கோவை :கட்சிக்காகவும், தேர்தலை முன்னிட்டும், அ.தி.மு.க., இளம் முகங்களை தயார் செய்து வருகிறது. குறிப்பாக, இளம் பேச்சாளர்களைக் களமிறக்கி தி.மு.க.,வைத் திணறடிக்க, திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., மாணவரணி சார்பில், இளம் பேச்சாளர் முகாம் தமிழகம் முழுதும் நடத்தப்பட்டது. 9 மண்டலங்களாக பல்வேறு கட்டங்களில் நடந்த முகாம்களில், 23 தலைப்புகளில் பேச வைத்து, 220 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 35 வயதுக்கு உட்பட்டவர்களையே தேர்வு செய்திருக்கின்றனர். இதன் இறுதிக் கட்டத் தேர்வு, சென்னையில் நடந்தது. இதில் 130 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு 'உரிமைக் குரல்' என்ற பெயரில், இறுதிக் கட்டமாக நான்கு நாள் பயிற்சி, கட்சி பேச்சாளர்கள், நிபுணர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., மாணவரணி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதன் பிறகு நிறுத்தப்பட்டவை, தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை, தி.மு.க.,வால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள், எந்தெந்த விஷயங்களில் தி.மு.க.,வை அம்பலப்படுத்த வேண்டும் என, பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர். தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியாக இருப்பர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.