/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்டோபர் முதல் கோவையில் அதிகரிக்கிறது விமான சேவை
/
அக்டோபர் முதல் கோவையில் அதிகரிக்கிறது விமான சேவை
ADDED : செப் 30, 2024 04:50 AM
கோவை, : கோவை விமான நிலையத்தில் இருந்து, தற்போது தினமும் 27 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது, வரும் அக்., மாதத்தில் 30க்கும் அதிகமான புறப்பாடுகளாக உயரும் என, 'கொங்கு குளோபல் போரம்' நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் இயக்குனர் சதீஷ் கூறியதாவது:
அக்.,ல் கோவையில் இருந்து தினசரி, 30க்கும் அதிகமான விமான புறப்பாடு இருக்கும். புதிய விமான சேவைகள் அறிமுகமாவதால், தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட விமான சேவைகளால், உள்நாட்டு மற்றும் சர்வதேச சரக்கு கையாள்கை அதிகரித்துள்ளது.
வரும் அக்., 27 முதல், கோவை - ஐதராபாத் இடையே இண்டிகோவின் வாராந்திர சேவை 26ல் இருந்து 28 ஆக அதிகரிக்கவுள்ளது. அக்., 1 முதல், பெங்களூருவுக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்கவுள்ளது. கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவும் துவங்கவுள்ளது.
வரும் அக்., 27 முதல், சிங்கப்பூருக்கு இடைநில்லா விமானங்களை, இண்டிகோ இயக்கவுள்ளது. நவ.,ல் இருந்து ஏர் இந்தியா நிறுவனம், டில்லிக்கு அதிகாலை விமானத்தை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, வெவ்வேறு நகரங்களுக்கும், கூடுதல் சேவை வழங்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில், கோவையில் இருந்து இலங்கை, கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

