/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அய்யனோர் அம்மனோர்' திருவிழா கோத்தரின மக்கள் பாரம்பரிய நடனம்
/
'அய்யனோர் அம்மனோர்' திருவிழா கோத்தரின மக்கள் பாரம்பரிய நடனம்
'அய்யனோர் அம்மனோர்' திருவிழா கோத்தரின மக்கள் பாரம்பரிய நடனம்
'அய்யனோர் அம்மனோர்' திருவிழா கோத்தரின மக்கள் பாரம்பரிய நடனம்
ADDED : ஜன 13, 2025 12:10 AM

கோத்தகிரி,; கோத்தகிரியில், கோத்தர் பழங்குடியின மக்களின், 'அய்யனோர் அம்மனோர்' திருவிழா சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் பணியர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், கோத்தர் மக்கள், புதுகோத்தகிரி, கீழ்கோத்தகிரி, திருச்சிக்கடி, கொல்லிமலை மற்றும் கோக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களது பாரம்பரிய தொழில், மண்பாண்டம், விவசாய உபகரணங்கள் தயாரிப்பதாகும்.
இவர்கள், 'அய்யனோர் அம்மனோர்' என்ற குல தெய்வத்தை வணங்கி வருகின்றனர். பாரம்பரியம் மற்றும் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் இம்மக்கள், ஆண்டுதோறும் டிச., இறுதி அல்லது ஜன.,யில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
நேரு பூங்காவில் விழா
இந்நிலையில், கோத்தகிரி நேரு பூங்கா பகுதியில் அமைந்துள்ள, 'அய்யனோர் அம்மனோர்' கோவிலில் திருவிழா நடந்தது.
முன்னதாக, புது கோத்தகிரி கிராமத்தில் இருந்து, கலாசார உடை அணிந்து ஊர்வலமாக வந்த மக்கள் கோவிலை அடைந்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடை திறக்கப்படும் இக்கோவிலில், பூசாரி சாம்பிராணி புகையில் சிறப்பு பூஜை நடத்தினார்.
தொடர்ந்து, கோத்தர் மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்ப, சிறுவர்கள் முதல், முதியோர் வரை, குதுாகலத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர். ஏராளமான உள்ளூர் மக்கள் பங்கேற்றனர். இதனை பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.