/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அக்கா'.... மாணவியர் பாதுகாப்பில் 'பக்கா!' கமிஷனர் திட்டத்துக்கு வரவேற்பு l ஓராண்டில் 400 வழக்குகள் பதிவு
/
'அக்கா'.... மாணவியர் பாதுகாப்பில் 'பக்கா!' கமிஷனர் திட்டத்துக்கு வரவேற்பு l ஓராண்டில் 400 வழக்குகள் பதிவு
'அக்கா'.... மாணவியர் பாதுகாப்பில் 'பக்கா!' கமிஷனர் திட்டத்துக்கு வரவேற்பு l ஓராண்டில் 400 வழக்குகள் பதிவு
'அக்கா'.... மாணவியர் பாதுகாப்பில் 'பக்கா!' கமிஷனர் திட்டத்துக்கு வரவேற்பு l ஓராண்டில் 400 வழக்குகள் பதிவு
ADDED : மார் 06, 2024 01:33 AM
கோவை:கோவையில், கல்லுாரி மாணவியர் பாதுகாப்புக்கென போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்திய, 'போலீஸ் அக்கா' திட்டம், மாணவியர் மத்தியில் பலத்த வரவேற்பபை பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில், 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மாணவியர் வேண்டுகோளின்படி, பஸ்களின் உள்ளே கேமரா பொருத்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தொடர்ந்து நடக்கின்றன. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர், வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள், என எந்த வேறுபாடு இல்லாமல், வன்கொடுமை தொடர்கிறது.
இதுதவிர, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த, கோவை மாநகர போலீஸ் சார்பில், போலீஸ் அக்கா திட்டம் துவங்கப்பட்டது.
பயந்து ஒதுங்கி நிற்கும் பெண்களுக்கு ஆதரவாக, ஒரு கரம் நீளும் போது, அது உற்ற துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி ஒரு துணையை ஏற்படுத்தத்தான், மாநகர போலீசார் திட்டமிட்டு, 'போலீஸ் அக்கா' திட்டம், 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது.
திட்டத்தில், 60 கல்லுாரிகளுக்கு ஒரு பெண் போலீஸ் வீதம், 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவியருடன் கலந்துரையாடி, அவர்களுக்கு யாரும் தொந்தரவு கொடுத்தால், தங்களை அழைக்கலாம் என தைரியம் கொடுக்கின்றனர். இத்திட்டத்துக்கு பெண்கள், கல்லுாரி மாணவியரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில், 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்படுகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால், உடனே சென்று போலீசார் உதவுகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, இப்பணியை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடவடிக்கைகள், பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்வது, ஆகிய மூன்று கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை, மீண்டும் பள்ளியில் சேர்க்க, 'ஆபரேஷன் ரீ பூட்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
கல்லுாரி மாணவியர் அவர்கள் பிரச்னையை, நட்பு ரீதியில் தெரிவிக்க 'போலீஸ் அக்கா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அவற்றுக்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. மாணவியர் தெரிவித்த கருத்துக்களின்படி, அவர்களின் பாதுகாப்புக்காக பஸ்களில் கேமரா பொருத்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

