/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லா நெடுஞ்சாலைப் பணிகளுமே அருமை... அட... நம்புங்க பாஸ்! 3 ஆண்டுகளாக குறையொன்றும் இல்லையாம்!
/
எல்லா நெடுஞ்சாலைப் பணிகளுமே அருமை... அட... நம்புங்க பாஸ்! 3 ஆண்டுகளாக குறையொன்றும் இல்லையாம்!
எல்லா நெடுஞ்சாலைப் பணிகளுமே அருமை... அட... நம்புங்க பாஸ்! 3 ஆண்டுகளாக குறையொன்றும் இல்லையாம்!
எல்லா நெடுஞ்சாலைப் பணிகளுமே அருமை... அட... நம்புங்க பாஸ்! 3 ஆண்டுகளாக குறையொன்றும் இல்லையாம்!
UPDATED : ஜன 03, 2024 01:31 AM
ADDED : ஜன 03, 2024 12:04 AM

-நமது நிருபர்-
கோவையில் கடந்த 3 ஆண்டுகளாகப் போடப்பட்ட அனைத்து ரோடுகளுமே, தரமாகப்
போடப்பட்டுள்ளன என்று, மாநில நெடுஞ்சாலைத்துறையின் தரக்கட்டுப்பாட்டு
பிரிவு கூறி, பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ், ரெகுலர், பிராஜெக்ட், நபார்டு, கிராமச்சாலைகள், சாலை பாதுகாப்பு என பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவற்றில், மற்ற பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் பாலம் கட்டுதல், ரோடு பணிகளின் தரத்தை பரிசோதித்து, அதிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்வதற்காக, சாலை தரக்கட்டுப்பாட்டுப் பிரிவும் தனியாகவுள்ளது.
ஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறையால் சீரமைக்கப்படும் பெரும்பாலான ரோடுகள், சில மாதங்களிலேயே அல்லது ஒன்றிரண்டு மழைக்கே தாங்காத அளவிலான தரத்தில்தான் பணிகள் நடக்கின்றன.
இதைக் கண்டறிந்து, அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள இந்தப்பிரிவு, அதைச் சரியாகச் செய்கிறதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ், 1168 கி.மீ., நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
இவற்றைத் தவிர்த்து, 360 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் பணிகளையும், இத்துறையின் கீழுள்ள என்.எச்., பிரிவு அதிகாரிகளே மேற்கொள்கின்றனர்.
இந்த ரோடுகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைப்பணிகள் நடந்து வருகின்றன.
மாவட்டத்தின் பல பகுதிகளில், ஏராளமான பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன; மண் ரோடு, தார் ரோடு ஆக மாற்றப்பட்டுள்ளது; பல ரோடுகள், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன; சில புதிய ரோடுகளும் போடப்பட்டுள்ளன.
2021 ஜனவரியிலிருந்து, கடந்த மூன்றாண்டுகளில் நடந்துள்ள நெடுஞ்சாலைப்பணிகளில், இந்த பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, தரமின்றி நடந்த பணிகள் இருந்தால் அதன் விபரம், கண்டறியப்பட்ட குறைகள், அவை நிவர்த்தி செய்யப்பட்டதா போன்ற விபரங்கள், தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு கோவை கோட்டப் பொறியாளரிடம்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், '2022-2023 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகளின் பட்டியல் மட்டும் தரப்பட்டுள்ளது. அந்தப் பணிகளில் மட்டுமின்றி, கடந்த மூன்றாண்டுகளாகவே, எந்தப் பணியிலும் எந்தக் குறையும் கண்டறியப்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதில்தான், மனுதாரர்களை மலைக்க வைத்திருப்பதுடன், பல விதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கோவை மாநகராட்சியின் சார்பில், 2732 கி.மீ., நீளமுள்ள ரோடுகள், பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் பல ரோடுகளிலும், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இந்தப் பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்து, பல ரோடுகளிலும் பணிகள் தரமின்றி நடப்பதை உறுதி செய்து, லட்சக்கணக்கில் அபராதமும் விதித்து வருகிறார்.
ஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் எந்தப் பணியிலுமே குறையே இல்லை; எல்லாமே தரமாக உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறையின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரி கூறியிருப்பது, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவுள்ளது.
இவ்விருதுறையிலுமே குறிப்பிட்ட சில கான்ட்ராக்டர்கள்தான், மாறி மாறி பணி செய்கின்றனர்.அவர்கள், மாநகராட்சியில் மட்டும் தரமற்ற பணிகளைச் செய்து விட்டு, மாநில நெடுஞ்சாலைகளிலும் 100 சதவீதம் தரமாக பணி செய்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.
இதிலிருந்தே, நெடுஞ்சாலைப் பணிகளில் தரப்படும் கமிஷனில், இந்த பிரிவு அதிகாரிகளுக்கும் பங்கு போவது உறுதியாகியுள்ளது.
இப்படி ஒரு பிரிவை வைத்து, அதற்கு தனி அதிகாரி, வாகனம், சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக,அதைக் கலைத்து விடுவதே நல்லது!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இந்தப் பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்து, பல ரோடுகளிலும் பணிகள் தரமின்றி நடப்பதை உறுதி செய்து, லட்சக்கணக்கில் அபராதமும் விதித்து வருகிறார்