/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாறு படுகைக்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு ஒரு தலைபட்சம்!ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு
/
பாலாறு படுகைக்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு ஒரு தலைபட்சம்!ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு
பாலாறு படுகைக்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு ஒரு தலைபட்சம்!ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு
பாலாறு படுகைக்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு ஒரு தலைபட்சம்!ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு
ADDED : பிப் 12, 2024 11:18 PM

பொள்ளாச்சி:'பாலாறு படுகைக்கு ஒரு தலைபட்சமாக கூடுதலாக நீரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்,' என, ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால், பாசனத்துக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உயிர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள நிலை பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டுமென புதிய ஆயக்கட்டு விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்க அரசு உத்தரவிட்டதன் பேரில், நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியாறு புதிய பாசனம், 'ஆ' மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக, நேற்று முதல் மார்ச், 23ம் தேதி வரை, 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு, 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் மொத்தம், 610 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
இதன் வாயிலாக, 22,332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதங்கம்
ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக, பல கட்ட பேச்சு நடத்திய பிறகு நீர்வளத்துறை சார்பில், தற்போது பி.ஏ.பி., திட்ட அணைகளில் குறைவாக நீர் இருப்பதால், 19 நாட்களுக்கு, 610 மில்லியன் கனஅடி வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், அதிகாரிகள் திட்டக்குழுவுடன் நீர் பகிர்மானத்தின் போது கொடுத்த, 'வாட்டர் பட்ஜெட்'க்கு மாறாக, பாலாறு படுகைக்கு முதலாம் மண்டலத்துக்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எங்களிடம் வழங்கப்பட்ட 'வாட்டர் பட்ஜெட்' படி, பாலாறுக்கு இரண்டு சுற்றுக்கு, நான்காயிரம் மில்லியன் கனஅடி குறிப்பிட்டு, தற்போது, இரண்டரை சுற்றுக்கு ஐந்தாயிரம் மில்லியன் கனஅடி என அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெற்றுள்ளனர்.
ஆழியாறு திட்டக்குழுவிடம் நீர் வரவு, செலவுகளை வெளிப்படையாக காட்டாமல் குறைத்து காட்டி, திட்டமிட்டே பாலாறு பகுதிக்கு கூடுதலான நீரை, ஒரு தலைபட்சமாக ஒதுக்கீடு செய்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆழியாறு பகுதிக்கு, 670 மில்லியன் கனஅடி நீர் கேட்டபோது, நீர் பற்றாக்குறை காரணம் காட்டி, வெறும், 60 மில்லியன் கனஅடி நீரை வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து, 610 மில்லியன் கனஅடி மட்டுமே வழங்குகின்றனர்.
திட்டமே முடங்கும்!
அதே நேரத்தில், பாலாறு பகுதியில் முதலாம் மண்டலத்துக்கு, ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை எப்படி கூடுதலாக வழங்க முடியும். நீர்வளத்துறை அதிகாரிகளின் இதுபோன்ற முரண்பட்ட பரிந்துரைகளால், விவசாயிகளுக்கு துறையின் மீதும், அரசின் மீதும் நம்பகத்தன்மை போய்விடும்.
இதுபோன்ற கடுமையான வறட்சி காலங்களில் இரண்டு பகுதிகளிலும் விவசாயத்தை காக்க முறையான நீர் பங்கீடு செய்ய வேண்டும். ஆனால், ஆழியாறுக்கு மட்டும் உயர் மட்டக்குழு பரிந்துரைப்படி நீரை ஒதுக்கிவிட்ட, பாலாறு படுகைக்கு மட்டும் உயர்மட்டக்குழு பரிந்துரைக்கு மாறாக கூடுதலாக நீரை ஒதுக்கீடு செய்வது, ஒட்டுமொத்த பி.ஏ.பி., திட்டத்தையே முடக்கும் செயலாகும்.
இது தொடர்பாக நீர்வளத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்கப்படும். மேலும், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.