/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏற்கனவே இரண்டு; புதிதாக ஒன்று! மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்
/
ஏற்கனவே இரண்டு; புதிதாக ஒன்று! மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்
ஏற்கனவே இரண்டு; புதிதாக ஒன்று! மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்
ஏற்கனவே இரண்டு; புதிதாக ஒன்று! மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்
ADDED : ஜன 28, 2024 10:56 PM
குடிமங்கலம்;சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை அகற்ற வேண்டும்; புதிதாக கடைகளை அனுமதிக்கக்கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி, பெதப்பம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், இரண்டு 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலுக்கு செல்லும் வழியிலும், போக்குவரத்து மிகுந்த செஞ்சேரிமலை ரோட்டிலும், இந்த மதுக்கடைகள் அமைந்துள்ளன.
இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், 'சில்லிங்' மதுவிற்பனையும், ஜோராக நடக்கிறது.
நால்ரோட்டில், பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர், விளைநிலங்களுக்கு செல்லும் பெண்களும், 'குடி'மகன்களால், முக்கிய ரோடுகளில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், நால்ரோடு அருகே, புதிதாக டாஸ்மாக் 'பார்' அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடியரசு தினத்தன்று, சோமவாரப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபையில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, மக்கள் சார்பில், மனு கொடுத்து, கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இயங்கும், டாஸ்மாக் மதுக்கடை எண், 2336 மற்றும் 2337 ஆகியவற்றை அகற்ற வேண்டும். நால்ரோடு பகுதியில், புதிதாக மதுபான கூடம் அமைக்கக்கூடாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையிலாவது, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.