ADDED : செப் 29, 2026 06:01 PM
பெ.நா.பாளையம்: வேளாண் துறை சார்பில், சின்னத்தடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் அட்மா திட்டம் வாயிலாக, பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சிக்கு, மாவட்ட துணை இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேளாண்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள், நீர்த் தேவை குறைந்த சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம் மற்றும் தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்து, துணை வேளாண் அலுவலர் சுரேஷ் விளக்கினார்.
‘ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண்வளம் குறைகிறது. பயிர்களை மாற்றி பயிரிடுவதால், மண் ஆரோக்கியம் மேம்படும், தண்ணீர் சேமிக்கப்படும். சந்தை விலை சரிவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்’ என, அறிவுறுத்தப்பட்டது.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி, தொழில்நுட்ப மேலாளர்கள் மகேந்திரன், தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
