46 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
46 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
ADDED : செப் 14, 2026 05:03 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் மேல்நிலைப் பள்ளியில், 46 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் மீண்டும் சந்தித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பயனீர் மேல்நிலைப் பள்ளியில், 1979–80ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர் கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள பி.ஆர். கார்டனில் சந்தித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்ததால், ஒருவரை ஒருவர் பார்த்த மகிழ்ச்சியில், தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டனர். பள்ளியில் நடந்த இனிமையான நினைவுகளைப் பேசி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில், மாணவர்களின் சுய அறிமுகம், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குதல், சொற்பொழிவு ஆகியன நடந்தன. கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
1979–80ம் ஆண்டில், 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதிய, 76 மாணவ, மாணவியரும் வெற்றி பெற்று, பயனீர் பள்ளி வரலாற்றில் முதன் முதலாக, 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது நாங்கள் தான் என பெருமிதமாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் ஆசிரியர்கள் ஏழு பேர் பங்கேற்று வாழ்த்தினர்.
