50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவியர் சந்திப்பு
50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவியர் சந்திப்பு
ADDED : பிப் 16, 2026 06:18 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவியர், 40 பேர் மீண்டும் சந்தித்து, தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த, 1976--77ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவியர், 40 பேர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு பள்ளி குழு தலைவர் துரைசாமி தலைமை வகித்தார் செயலாளர் ஸ்ரீ லதா ஜெகநாதன், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடந்த, 1976ம் ஆண்டு அப்போதைய, 11ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.,) படித்த, 40 மாணவியர் பங்கேற்று, தங்களுடைய பள்ளிக்கால நினைவுகளை நினைவுகூர்ந்தனர். பின்னர் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் லீலாவதி, வசந்த கோகிலம், சாந்தா, சரஸ்வதி, தனபாக்கியம், சுலோசனா, ஜூலி உள்ளிட்ட ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
நிகழ்வையொட்டி நடந்த சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவியர் கலந்து கொண்டனர்.
