/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் என்று துவங்கும் உற்பத்தி! மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள் தவிப்பு
/
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் என்று துவங்கும் உற்பத்தி! மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள் தவிப்பு
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் என்று துவங்கும் உற்பத்தி! மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள் தவிப்பு
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் என்று துவங்கும் உற்பத்தி! மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள் தவிப்பு
ADDED : அக் 13, 2024 10:14 PM
உடுமலை : வடிப்பாலையில் மட்டும், உற்பத்தி துவங்கியுள்ள நிலையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து, கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தியை துவக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. தமிழகத்தின், முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, கடந்த, 1960ல் இந்த ஆலை துவக்கப்பட்டது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் ஆலையில் அங்கத்தினர்களாக உள்ளனர். அப்பகுதி விவசாயிகள் ஆலைக்கு கரும்பு பதிவு செய்து, அனுப்பி வந்தனர்.
ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தொடர் பயன்பாடு மற்றும் இயந்திரங்களை குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஆலையில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கத்துவங்கியது.
கடந்தாண்டு, இயந்திரங்கள் பழுது உள்ளிட்ட காரணங்களால், கரும்பு அரவை பாதித்து, பதிவு செய்த கரும்பு தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடப்பாண்டும், ஆலையை இயக்க முடியாத சூழல் உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில், அரசுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பி விட்டனர்.
இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மனுவில், 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பல்வேறு காரணங்களால், பிழிதிறன் குறைந்து, உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மூன்று மாவட்டங்களைச்சேர்ந்த, 15 ஆயிரம் விவசாயிகள் பாதித்துள்ளனர்; ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், கரும்பு எடுத்து வரும் வாகன ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலை அருகிலுள்ள, அமராவதி, திருமூர்த்தி, குதிரையாறு, பாலாறு, பொருந்தலாறு அணை பாசன பகுதிகள், கரும்பு சாகுபடிக்கு உகந்தவையாகும்.
திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக புனரமைக்க வேண்டும். புனரமைத்தால் முழு கொள்ளளவில் கரும்பு அரைத்து லாபம் பெற முடியும்.
சர்க்கரை கட்டுமானம் அடிப்படையில், கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த ஆலையை புதுப்பிக்க சுமார், 86 கோடி ரூபாய் தேவை என உத்தேச முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.166 கோடிக்கு முன்மொழிவு
இது குறித்து நேற்று ஆலையின் வடிப்பாலையில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், ''அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க, 80 கோடி ரூபாய்; செயல்பாட்டுக்கு கொண்டு வர, 86 கோடி ரூபாய் என மொத்தம், 166 கோடி ரூபாய் தேவை என உத்தேச முன்மொழிவு பெறப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, படிப்படியாக நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அரவை துவங்கும் சூழ்நிலை உருவாக்கப்படும்,'' என்றார்.
விவசாயிகள் கூறுகையில், 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின், இணை அமைப்பான, எரிசாராய வடிப்பாலையில் மட்டும் தற்போது உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை. வடிப்பாலையை இயக்க அக்கறை காட்டும் கூட்டுறவுத்துறையினர், ஆலையில் அரவையை துவக்கி, சர்க்கரை உற்பத்தி செய்து, விவசாயிகளை பாதுகாக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.