/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயந்திர நடவு மேற்கொள்வதற்கு மானியம் அமராவதி விவசாயிகளுக்கு அழைப்பு
/
இயந்திர நடவு மேற்கொள்வதற்கு மானியம் அமராவதி விவசாயிகளுக்கு அழைப்பு
இயந்திர நடவு மேற்கொள்வதற்கு மானியம் அமராவதி விவசாயிகளுக்கு அழைப்பு
இயந்திர நடவு மேற்கொள்வதற்கு மானியம் அமராவதி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 26, 2025 11:06 PM
மடத்துக்குளம், ; மடத்துக்குளம் வட்டாரம், அமராவதி பழைய வாய்க்கால் பாசனத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு குறுவை சாகுபடி தொகுப்பு மற்றும் இயந்திர நடவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளான, காரத்தொழுவு, கணியூர், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, குமரலிங்கம் பகுதி விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம், கணியூர் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு பேசுகையில், ''மடத்துக்குளம் வட்டாரம், அமராவதி பழைய வாய்க்கால் பாசனத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு, குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய துக்கையண்ணன் பேசியதாவது:
குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், நோய், பூச்சி நோய் தாக்குதல் எதிர்ப்பு திறன் கொண்ட தரமான நெல் விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
நெல் விதைகளை நன்கு சுத்தம் செய்து, பதர்கள் நீக்கி, ஊற வைத்து, முளை கட்டி, சூடோமோனாஸ் போன்ற உயிரி பூஞ்சான கொல்லி கொண்டும், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இயந்திரங்களை கொண்டு நடவு செய்தால், விதை செலவும், ஆட்கள் தேவையும், சீரான இடைவெளியில் நடவு செய்வதால் வளர்ச்சியும், களை எடுப்பது குறைவது என, நெல் சாகுபடி செலவு பெருமளவு குறையும்.
அதே போல், விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மையை பொருத்தே, உரமிடுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகப்படியான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அங்கக உயிர் உரங்களை இட்டால் மண் வளம் பாதுகாக்கப்படும். நெற்பயிர்களை கண்காணித்து, குலைநோய், இலைப்புழு, தண்டு துளைப்பான், புகையான் உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு ஏற்பட்டால், வேளாண் துறை அறிவுரை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் தேவி, உதவி வேளாண் அலுவலர்கள் கோகுல், சிம்சோன், பாலு மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.