/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவை மிரட்டும் ஆட்கொல்லி அமீபா; எல்லைகளில் மருத்துவக் குழுவினர் 'அலர்ட்'
/
கேரளாவை மிரட்டும் ஆட்கொல்லி அமீபா; எல்லைகளில் மருத்துவக் குழுவினர் 'அலர்ட்'
கேரளாவை மிரட்டும் ஆட்கொல்லி அமீபா; எல்லைகளில் மருத்துவக் குழுவினர் 'அலர்ட்'
கேரளாவை மிரட்டும் ஆட்கொல்லி அமீபா; எல்லைகளில் மருத்துவக் குழுவினர் 'அலர்ட்'
ADDED : ஆக 06, 2024 11:50 PM

மேட்டுப்பாளையம் : கேரளாவில் அமீபா தொற்று மற்றும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால், கேரள மாநில எல்லைப்பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு தொடர் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில், 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையை தின்னும் அமீபா தொற்றால், கடந்த மூன்று மாதங்களில் நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதில், மூன்று பேர் உயிரிழந்தனர். இதுவரை குழந்தைகளை மட்டுமே பாதித்து வந்த இந்த தொற்றுக்கு, முதல் முறையாக இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
அதே போல், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 'நிபா' வைரஸ் காய்ச்சல் காரணமாக, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கேரளா மாநிலம் முழுவதும் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கேரளாவில் நிபா, அமீபா போன்ற பல்வேறு காய்ச்சல்களால் மக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், அது தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காரமடையில் உள்ள கேரளா மாநில எல்லை பகுதியான கோபனாரியில் ஜூலை 22 முதல் தொடர்ந்து, நிபா வைரஸ், அமீபா தொற்று போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து இங்கு வரும் நபர்களுக்கு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா செல்வோர் கண்டிப்பாக நீரிநிலைகளில் குளிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகிறது.
அச்சம் வேண்டாம்
காரமடை வட்டாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்குள்ள கிராமங்களில் நீர்நிலைகள் கண்காணிக்கப்படுவதுடன், யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டு, அங்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகளில், நீண்ட நாள் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், நீர்நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழக சுகாதார துறையினர்