/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே மேம்பால பகுதியில் விடிந்தாலே விபத்து தான்!
/
ரயில்வே மேம்பால பகுதியில் விடிந்தாலே விபத்து தான்!
ரயில்வே மேம்பால பகுதியில் விடிந்தாலே விபத்து தான்!
ரயில்வே மேம்பால பகுதியில் விடிந்தாலே விபத்து தான்!
ADDED : நவ 18, 2024 10:52 PM

வடிகால் வசதி வேண்டும்
இடையர்பாளையம், 93வது வார்டு, பெருமாள் கோனார் வீதியில் மழைநீர் வடிகால் வசதியில்லை. மழை சமயங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வாகனங்களை இயக்கவும், நடந்து செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது.
- வரதராஜ், இடையர்பாளையம்.
விபத்து நடக்க வாய்ப்பு
மதுக்கரை ரோடு, சுந்தராபுரம் முதல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், மைல்கல் செக்போஸ்ட் முதல் ரத்தினம் பள்ளி அருகே மேம்பாலம் வரை, சாலை நடுவே தடுப்புகள் வைக்கப்படவில்லை. இதனால், இருபுறமும் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.
- தங்கவேல், சுந்தராபுரம்.
தெருவிளக்கு பழுது
சங்கனுார், நல்லாம்பாளையம், சீனிவாச நகரில், ' எஸ்.பி - 36, பி -24' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. கடும் இருள் காரணமாக இரவு, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை.
- சங்கரமூர்த்தி, சங்கனுார்.
இடறி விழும் வாகனஓட்டிகள்
பெர்க்ஸ் ஆர்ச் ரோட்டில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தார் பெயர்ந்து கற்களாக சிதறிக்கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கற்களில் இடறி கீழே விழுகின்றனர். விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.
- மனோகரன், ராமநாதபுரம்.
குறுக்கே பாயும் மாடுகள்
விளாங்குறிச்சி ரோடு, குமுதம் நகர், பூங்கா சாலையில் கால்நடை வளர்ப்போர் மாடுகளை சாலையோரம் கட்டி வைக்கின்றன.வாகனஓட்டிகள், நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். திடீரென குறுக்கே வரும் மாடுகளால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- வெள்ளைச்சாமி, குமுதம் நகர்.
இருளால் தொடரும் விபத்து
கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பொம்மனாம்பாளையம் பிரிவிலிருந்து ஓனாம்பாளையம் வரை உள்ள மின்கம்பங்களில தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- சண்முகம், பொம்மனாம்பாளையம்.
துரத்தும் நாய்கள்
துடியலுார், பூம்புகார் நகரில், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. கேட்டின் முன் படுத்துக்கொள்ளும் நாய்களால், வீட்டை விட்டு கூடவெளியே வர முடியவில்லை. நடந்து செல்பவர்களையும், பைக்கில் செல்வோரையும் நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.
- வேலுச்சாமி, துடியலுார்.
பூங்காவா...குட்டிக்காடா
கணபதி, 19வது வார்டு, திருவேங்கடம் நகரில் சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பூங்கா முழுவதும் அடர்த்தியாக புதர் செடிகள் வளர்ந்துள்ளது. குட்டிக்காடு போல இருப்பதால் குழந்தைகள் பூங்காவில் விளையாட முடிவதில்லை.
- மணி, கணபதி.
எங்கும் குழிகள்
கோவை மாநகராட்சி, 83வது வார்டு, அப்பாசாமி கல்லுாரி சலையில் ஆங்காங்கே குழிகள் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. கார் போன்ற பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.
- சக்திவேல், 83வது வார்டு.
சாலையில் மழைநீர் குளம்
சரவணம்பட்டி, ஜி.கே.எஸ்., நகர், சத்தி மெயின் ரோடு, ஸ்கோடா கார் ஷோரும் முன்பு குடியிருப்பு புகுதியில் மண் சாலை மேடு, பள்ளமாக உள்ளது. தாழ்வான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன.
- சரவண வேல், ஜி.கே.எஸ்., நகர்.
விடிந்தாலே விபத்துதான்
கோவை மாநகராட்சி, நேதாஜிபுரம், 55 மற்றும் 56வது வார்டுக்குட்பட்ட எல்.சி.,4 ரயில்வே மேம்பால பகுதியில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மேடு, பள்ளமாக சேறாக இருக்கும் சாலையில் தினம், தினம் விடிந்தாலே விபத்துகள் தான் நடக்கிறது.
- செல்வராஜ், நேதாஜிபுரம்.