விபத்துகளுக்கு காரணமாகும் அசுர வேகம் தினம் ஒரு சம்பவம்!தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம்
விபத்துகளுக்கு காரணமாகும் அசுர வேகம் தினம் ஒரு சம்பவம்!தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம்
UPDATED : ஜூன் 21, 2026 08:16 PM
ADDED : ஜூன் 21, 2026 08:11 PM

சூலுார்: அவிநாசி சாலை, திருச்சி சாலை, நீலம்பூர் பை-பாஸ் சாலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் தினமும் நடக்கும் நிகழ்வாகி விட்டது. விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி சாலை, செங்கப்பள்ளி முதல் நீலம்பூர் வரை ஆறுவழிச்சாலையாக உள்ளது. நீலம்பூரில் இருந்து வாளையாறு வரை இருவழி சாலையாக உள்ளது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலையான திருச்சி சாலை, கரூர் முதல் சூலுார் வழியாக கோவை வரை செல்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், காங்கயம், திருச்சி மற்றும் பாலக்காடு உட்பட பல்வேறு நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளாக இவை உள்ளன.
இவற்றில், கருமத்தம்பட்டி, நீலம்பூர், சூலுார், சிந்தாமணிபுதுார் உட்பட பகுதிகள் சந்திக்கின்றன. இந்த சாலைகளில், கோவை மற்றும் பாலக்காடு நோக்கி, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கோவையில் இருந்து வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலைகளில் பயணிக்கின்றன. அதற்கேற்ப, அனுதினமும் விபத்துகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அவிநாசி சாலையில், கருமத்தம்பட்டி --- சென்னியாண்டவர் கோவில் இடையிலும், நீலம்பூர் பை-பாஸ் சாலையில் பட்டணம் பிரிவு, வெள்ளலுார் பிரிவு உட்பட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன், நீலம்பூர் மேம்பாலத்தில், அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ் கவிழ்ந்து, 49 பயணிகள் காயமடைந்தனர்.
இரவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயலும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. அவிநாசி சாலையை தவிர்த்து மற்ற சாலைகளில் இத்தகைய விபத்துகள் நடக்கின்றன. அவிநாசி சாலை ஆறு வழிச்சாலை என்பதால், அதிவேகம் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. அசுர வேகத்தில் வாகனங்களை இயக்குதல், முந்தி செல்ல முற்பட்டு, தடுப்பு சுவரில் மோதி கவிழ்தல், சாலையை கடப்போர் வாகனங்கள் மோதி உயிரிழத்தல் போன்ற விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.
கண்காணிப்பும் காமிராக்களும் இல்லை மேற்கண்ட சாலைகளில், அதிக விபத்துகள் நடந்து வரும் நிலையில், போக்குவரத்து துறையினரோ, போலீசாரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. விதிமீறும் வாகனங்களை கண்டறிய உதவும் காமிராக்களும் இல்லை என்பது வேதனைக்கு உரியதாக உள்ளது. முக்கிய சந்திப்புகளில் மட்டும் ஒரு சில காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; அதுவும் வேலை செய்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், விதிமீறும் வாகன ஓட்டிகளையும், விபத்துக்கான காரணங்களையும் கண்டறிய முடிவதில்லை.
அசுர வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு, கடும் தண்டனை வழங்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, விபத்து பகுதிகளை அடையாளம் கண்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கையாக உள்ளது.
