/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது; முறைப்படுத்தப்படாத மேலாண்மைக் குழு
/
பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது; முறைப்படுத்தப்படாத மேலாண்மைக் குழு
பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது; முறைப்படுத்தப்படாத மேலாண்மைக் குழு
பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது; முறைப்படுத்தப்படாத மேலாண்மைக் குழு
ADDED : ஜூலை 12, 2025 12:57 AM
கோவை; கோவையில் செயல்படும் பெரும்பாலான அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையாக இயங்காமல் இருப்பதால், அந்தப் பள்ளிகளின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி செயல்பாடுகளை கண்காணித்தல், மாணவர் சேர்க்கை மற்றும் வருகையை உறுதிப்படுத்துதல், தேவையான வசதிகளை அறிவித்து நிதியுதவி பெறுதல் போன்ற, பல்வேறு அம்சங்களில் பள்ளி மேலாண்மைக் குழு, முக்கிய பங்கு வகிக்கிறது.
பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வியாளர், சுய உதவி குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற வேண்டும். பள்ளி வளர்ச்சியில் இந்த குழுவின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 60 சதவீத பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளன. 30 முதல் 40 சதவீத பள்ளிகளில் மட்டுமே, குழு சிறப்பாக செயல்படுகிறது. சில பள்ளிகளில், குழுவில் இருக்கும் சிலர், தனி அதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
இது குறித்து, பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட கருத்தாளர் அருளானந்தம் கூறியதாவது:
சமீபத்தில் நடைபெற்ற பள்ளி பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில், மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில், மேலாண்மைக் குழு ஒரு முக்கிய அமைப்பாக இருந்தாலும், சில தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பிறர் தலையீட்டை விரும்புவதில்லை.
அதேபோல், அதிகாரிகள் ஒருசிலர் பள்ளி நிர்வாகத்தை கட்டுப்படுத்த நினைப்பதால், சமூக பங்கேற்பு தடுக்கப்படுகிறது. பெற்றோர் மற்றும் உள்ளூர் நபர்கள் ஆகியோரின் பங்கேற்பு இருந்தால்தான், பள்ளியின் வளர்ச்சி சாத்தியமாகும்.
எனவே, பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.