/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிப்பொருளாக மாறிய நகர்புற நலவாழ்வு மையம்
/
காட்சிப்பொருளாக மாறிய நகர்புற நலவாழ்வு மையம்
ADDED : ஜன 12, 2025 11:04 PM

வால்பாறை; வால்பாறையில், நகர்புற நலவாழ்வு மையம் அடிக்கடி பூட்டியே கிடப்பதால், மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, நகராட்சி சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு, செப்., மாதம் நகர்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டது. இந்தகட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த மையம் துவங்கப்பட்ட பின், பொதுமக்களுக்கு காய்ச்சல், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சமீப காலமாக, பணியாளர் பற்றாக்குறையினால், நலவாழ்வு மையம் அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் வசதிக்காக துவங்கப்பட்ட சுகாதார மையத்தில் எந்த வசதியும் இல்லை.
நேற்று முன்தினம் காலை முதல் நலவாழ்வு மையம் பூட்டியே கிடந்ததால், சிகிச்சைக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். மேலும் சுகாதார வளாத்தில், 24 மணி நேரமும் வாகனங்கள் விதிமுறையை மீறி நிறுத்தப்படுவதால் சிகிச்சைக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுகிறது,' என்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் கேட்ட போது, 'நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஊழியர் பற்றாக்குறையால், இது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. நலவாழ்வு மையத்தை தினமும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மையத்தின் முன் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.